கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட ஒவ்வொரு வாக்காளர்களிடமும் தலா ஒரு ரூபாய் பெற்று, வேட்புமனு தாக்கலுக்கான டெபாசிட் தொகையை சில்லறையாக எடுத்து வந்து சுயேட்சை வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட ஒவ்வொரு வாக்காளர்களிடமும் தலா ஒரு ரூபாய் பெற்று, வேட்புமனு தாக்கலுக்கான டெபாசிட் தொகையை சில்லறையாக எடுத்து வந்து சுயேட்சை வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் கோவை மாவட்டம் எளச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற சமூக ஆர்வலர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சார்பில், 'மலரட்டும் அறம் சார்ந்த அரசியல்' என்ற முழக்கத்தை முன்வைத்து பிரபாகரன் தேர்தலில் களம் காண்கிறார்.

பிரபாகரன் தன்னுடைய வேட்புமனு டெபாசிட் தொகையைக் கட்டுவதற்கு மக்களிடமே கையேந்தியிருக்கிறார். டெபாசிட் தொகை ரூ. 10,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், சூலூர் தொகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தலா ஒரு ரூபாய் என தந்து டெபாசிட் தொகையைக் கட்டுவதற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார் பிரபாகரன். வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாகவும், பொதுமக்களை நேரடியாக சந்தித்தும் நிதி வசூல் செய்து வந்தார்.
இந்த நிலையில், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களிடம் வசூலித்த தொகையான 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை, 10 ரூபாய் நாணயங்களாக தட்டில் ஏந்தியபடி, ஊர்வலமாக இருசக்கர வாகனத்தில் வந்த சுயேட்சை வேட்பாளர் பிரபாகரன், அதனை சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் வழங்கி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வழங்கிய நாணயங்களை 6 அதிகாரிகள் எண்ணி சரிபார்த்தனர். பத்து ரூபாய் நாணயங்களை பல இடங்களில் வாங்க மறுக்கும் நிலையில், தேர்தல் டெபாசிட் தொகையை பத்து ரூபாய் நாணயங்களாக வழங்கியுள்ளார்.
சுயேட்சை வேட்பாளரான பிரபாகன் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், லஞ்சம், ஊழல் மற்றும் மது உள்ளிட்டவற்றிக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருகிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தக் கோரி 12 நாட்களும், ஜல்லிக்கட்டிற்காக டெல்லியில் 4 நாட்களும் அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது :- மக்களிடையே நிதி வாங்கி போட்டியிடுகின்றேன். சாதாரண மக்களும் தேர்ரதலில் போட்டியிடலாம் என்பதற்காக மக்களிடம் ஒரு ரூபாய் நிதி பெற்று போட்டியிடுகின்றேன். 10 ரூபாய் நாணயத்தை பொதுமக்கள் வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 10 ஆயிரம் ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயத்தை வைப்பு தொகையாக செலுத்தி இருக்கின்றேன். பொதுமக்கள் பிரச்சினையை முன் வைத்து தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றேன், எனக் கூறினார்.
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கான 5-வது நாளான இன்று மட்டும், தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன், இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பொன். கார்த்திகேயன், சென்னையைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் சந்தோஷ்குமார், அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன், தமிழக மக்கள் ஒற்றுமை கழகம் சார்பில் சின்ராஜ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.