கோவை : 250-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமையினர் கோவையில் விசாரணைகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை : 250-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமையினர் கோவையில் விசாரணைகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்களிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், 250-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, இந்திய உளவுத்துறை ஏற்கனவே இலங்கைக்கு தகவல்கள் அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பு இருப்பதையொட்டி, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களையும் கண்காணித்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சக்திசேனா அமைப்பின் தலைவர் அன்புமாரி ஆகியோரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், முகமது ஆஷிக், சம்சுதீன், முகமது சலாவுதீன், ஜாபர் சாதிக் அலி, சாகுல் ஹமீது உள்ளிட்ட 6 பேரை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக என்.ஐ.ஏ. சார்பில் சென்னை, கோவை, திண்டிவனம் பகுதிகளில் உள்ள கைது செய்யப்பட்ட நபர்களின் வீடுகளில் சோதனையிட்டனர். அதில், பென் டிரைவ்கள், சிடிக்கள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கைது செய்யப்பட்ட ஆறு பேருடன் மேலும் சிலர் சமூகவலைதளம் மூலம் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையினர் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்கள் என கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இலங்கையில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவை வந்துள்ளதாகவும், கோவையில் பல்வேறு இடங்களுக்குச் சென்ற அவர் பலரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த நபர் யார்..?, எதற்காக கோவை வந்து சென்றார்..? என்பது குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.