கோவை : தண்டுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெறும் தீச்சட்டி ஊர்வலத்தை முன்னிட்டு கோவையின் முக்கியப் பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை : தண்டுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெறும் தீச்சட்டி ஊர்வலத்தை முன்னிட்டு கோவையின் முக்கியப் பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நாளை நடக்கும் தண்டுமாரியம்மன் கோவில் தீச்சட்டி ஊர்வலமானது, கோணியம்மன் கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்ப செட்டி வீதி, பால் மார்க்கெட், கிரியன் சர்ச் ரோடு, புருக்பாண்ட் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி, சோமசுந்தரம் மில் ரோடு வழியாக அனுப்பர்பாளையம், டாக்டர் நஞ்சப்பா சாலையை அடைந்து, அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கிழக்குப்பகுதி வழியாக அவிநாசி சாலையிலுள்ள தண்டுமாரியம்மன் கோவிலை சென்றடைகிறது.
எனவே, தீச்சட்டி ஊர்வலத்தை முன்னிட்டு அதிகாலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படுகிறது.
• பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் இருந்து வரும் வாகனங்கள் உக்கடத்தை அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அல்லது பேரூர் பைபாஸ் சாலையில் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
• மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலையில் இருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் ஊர்வலம் ப்ரூக்பாண்ட் சாலையை அடையும் போது, பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் பொன்னையாராஜபுரம், சொக்கம்புதூர், சிவாலாய தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
• பேரூர் சாலையில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதூர், பொன்னையாராஜபுரம், தடாகம் சாலை வழியாக காந்திபார்க் அடைந்து அல்லது பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
• அவிநாசி சாலை பழைய மேம்பாலம் வழியாக உக்கடம் செல்லும் அனைத்து வாகனங்களும் அண்ணாசிலை சந்திப்பு அல்லது ஜே.எம். பேக்கரி சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி ஒசூர் ரோடு, பந்தயசாலை வழியாகவோ அல்லது ரயில்நிலையம் வழியாகவோ திருச்சி ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
• திருச்சி சாலையில் இருந்து டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்லும் வாகனங்களில் கனரக வாகனங்கள் கிளாசிக் டவர் வழியாக சுங்கம் பைபாஸ் அடைந்ததும், இலகுரக வாகனங்கள் வின்சென்ட் ரோடு வழியாகவும் உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
• ஊர்வலத்தின் இறுதிப்பகுதி முக்கியமான வீதிகளை கடக்கும்போது போக்குவரத்து வழக்கம்போல செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
• லாரிப் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது போல் அல்லாமல் காலை 6 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை அவிநாசி ரோடு மற்றும் ஊர்வல பாதை உள்ள பகுதியில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.