சூலூர் சட்டமன்ற தொகுதி – ஒரு பார்வை

கோவை மற்றும் திருப்பூர் மாநகரங்களுக்கு இடையே, கோவையில் இருந்து கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகுதி சூலூர்.


வரலாற்றில் சூலூர்

கோவை மற்றும் திருப்பூர் மாநகரங்களுக்கு இடையே, கோவையில் இருந்து கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகுதி சூலூர். தற்போது பேரூராட்சியாக உள்ள சூலூர், 2 ஆயிரத்து 300 ஆண்டு கால வரலாற்று சான்றுகளை கொண்ட தொன்மையான ஒரு ஊர். மேலும் சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட ஊர் என்ற பெருமையையும் கொண்டது, சூலூர் நொய்யல் நதியும், பெரியகுளம், சிறிய குளம் ஆகிய இரண்டு குளங்களும் சூலூரின் வாழ்வியலை தீர்மானிப்பதில் முதன்மயான பங்காற்றின. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் 300 ஆண்டுகள் வரை சூலூர் உரோமானிய வணிக மையமாக விளங்கியது. நொய்யல் நதியும், அதையொட்டி மேற்கு – கிழக்கு கடற்கரையை இணைக்கும் ராசகேசரி பெருவழியும் சூலூரின் உரோமானிய வணிக தொடர்புக்கு முக்கிய காரணிகளாக இருந்தன. இதற்கு சான்றாக கி.மு. 3 ம் நூற்றாண்டை சேர்ந்த எரான் நாணயங்கள் இப்பகுதியில் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

சூலூரின் உருவாக்கத்திற்கு சோழ மன்னர்களின் பங்களிப்பு முக்கியமானது. கி.பி.9 ம் நூற்றாண்டில் ஆதித்த சோழனால் சூலூரில் வேளாண்மை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கி.பி. 13 ம் நூற்றாண்டில் சூலூர் குளத்தை சுந்தர பாண்டியன் மன்னன் சீரமைத்துள்ளார். சோழர் காலத்தில் இந்த ஊர்,அரியபிராட்டி நல்லூர், சுந்தர பாண்டிய நல்லூர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சூரல் எனும் கொடிகள் நிரம்பிய ஊர் சூரலூராகி பின்னர் சூலூராக நிலைப்பெற்றுள்ளது. வெற்றிலைக்கும், வேளாண்மைக்கும் பெயர் பெற்ற ஊராக சூலூர் இருந்துள்ளது.

தொகுதி வரலாறு

1952 ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலின் போது, சூலூர் பகுதி திருப்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்தது. அடுத்து வந்த 1957 தேர்தலின் போது சூலூர் தொகுதி உருவாக்கப்பட்டது. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குழந்தையம்மாளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.ரமணியும் மோதினர். அதில் சூலூரின் முதல் சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குழந்தையம்மாள் 2 ஆயிரத்து 730 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்வு செய்யப்பட்டனர். 1962 தேர்தலிலும் சூலூர் தொகுதி இடம் பெற்றது. மீண்டும் போட்டியிட்ட குழந்தையம்மாள் 4 ஆயிரத்து 357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சின்னையன், பிரஷா சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளர் குமாரசாமி கவுண்டர், திமுக வேட்பாளர் ராசு ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். ஆனால் 1967 ம் ஆண்டு முதல் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக சூலூர் சேர்க்கப்பட்டது. கோவை, திருப்பூர் மாவட்ட பிரிவினைக்கு பின் நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது, மீண்டும் சூலூர் தொகுதி உருவாக்கப்பட்டது. 

புதிய சூலூர் தொகுதி 2011 ம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. அதில் அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கே இத்தொகுதியை ஒதுக்கின. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் ஈஸ்வரன் (தற்போது கொமதேக பொதுச்செயலாளர்) மற்றும் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்ந்த பனப்பட்டி தினகரனும் போட்டியிட்டனர். மொத்தம் 11 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பனப்பட்டி தினகரன் 88 ஆயிரத்து 680 வாக்குகள் பெற்று, 29 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் செந்தில்குமார் சுயோட்சை வேட்பாளர் தினகரனை விட குறைவான வாக்குகளோடு 4 ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

அடுத்து வந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. முதல் முறையாக சூலூரில் அதிமுக போட்டியிட்டது. மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிகவை சேர்ந்த பனப்பட்டி தினகரன் மீண்டும் போட்டியிட்டார். மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அதிமுகவை சேர்ந்த கனகராஜ் 36 ஆயிரத்து 631 வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சி.மனோகரை தோற்கடித்து வெற்றி பெற்றார். தனித்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மருதசாலம் மூன்றாம் இடம்(13460) பிடிக்க, மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் பனப்பட்டி தினகரன் நான்காம் இடத்திற்கு(13042) தள்ளப்பட்டார். கொமதேக வேட்பாளர் பன்னீர்செல்வம் என்கிற காளிசாமி ஐந்தாம் இடம் (9672) பிடிக்க, நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற நாம் தமிழர் வேட்பாளர் விஜயராகவன் ஏழாம் இடத்திற்கு (2873) தள்ளப்பட்டார்.

இடைத்தேர்தல் வேட்பாளர்கள்

சூலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்ததால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சூலூர் தொகுதியில் முதல் முறையாக திமுக, அதிமுக கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிகள் இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கின்றன. தமிழகத்தின் அரசியல் ஆளுமைகளான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத நிலையில், ஆட்சியை தீர்மானிக்கும் இடைத்தேர்தலாக இருப்பதால், வருகின்ற இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி போட்டியிடுகிறார். இவர் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் அமமுக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகுமார் போட்டியிடுகிறார். 2009 – 2014 காலகட்டத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், தற்போது அமமுகவில் கோவை புறநகர் மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

சூலூர் தொகுதி என்பது அதிமுக செல்வாக்கு உள்ள பகுதியாக பார்க்கப்படுகிறது. ஆனால் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நிலவுகிறது. சூலூருக்கு அருகேயுள்ள செங்கத்துறையை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான செ.ம.வேலுசாமி, அதிமுக சூலூர் ஊராட்சி செயலாளரும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவருமான மாதப்பூர் பாலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜின் சகோதாரர் கந்தசாமி ஆகிய மூவரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட வழக்கறிஞர் விஜயராகவன், வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் அருண் ரங்கராஜன், கோவை கிழக்கு பகுதி பொறுப்பாளர் இளங்கோவன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும். இதேபோல மக்கள் நீதி மய்யம், சமூக நீதிக்கட்சி, சுயேட்சைகள் என வரிசை கட்டி வேட்பாளர்கள் களமிறங்குவதால் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வாக்காளர்களும், தொகுதியும்

சூலூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 707 ஆண் வாக்காளர்கள், ஒரு இலடசத்து 47 ஆயிரத்து 711 பெண் வாக்காளர்கள் மற்றும் 17 திருநங்கைகள் என மொத்தம் 2 இலட்சத்து 91 ஆயிரத்து 435 வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் அதிகமுள்ள தொகுதியாக இத்தொகுதி உள்ளது.

சூலூர் தொகுதி என்பது கிராமப்பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது. சூலூர் ஊராட்சி ஒன்றியம், சுல்தான் பேட்டை ஊராட்சி ஒன்றியம், பல்லடம் பகுதியில் ஒரு பகுதி, சோமனூர், கருமத்தம்பட்டி, கண்ணம்பாளையம், இருகூர் ஆகிய பேரூராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. விசைத்தறியும், வேளாண்மையும் சூலூர் தொகுதியில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. சூலூர் தொகுதியை பொறுத்தவரை முதல் வெற்றியை பெறும் நோக்கத்தில் திமுகவும், ஆட்சியை தக்க வைக்க வெற்றி அவசியமென அதிமுகவும் போட்டியிடுவதால் தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...