கோவை : இடத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : இடத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த சில வாரங்களாக மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறாமல் இருந்தது. இன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்த செந்தில்குமார் அவரது மனைவி தேன்மொழி அவர்களது இரு மகன்கள் ஜெய் ஆதித்யா மற்றும் ஜீவன் ஆதித்யா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "தங்களுக்கு சூலூர் அரசு மருத்துவமனை அருகில் 30 சென்ட் பூர்வீக இடம் இருந்தது. அதில் பெரும்பாலான இடம் தங்களது பாகத்துடன் விற்கப்பட்டு விட்டது. இதில், தங்களுக்கு மூன்றரை சென்ட் இடம் இருக்கிறது. அதனை தற்போது சிலர் அபகரிக்க முயல்கின்றனர். அதில், அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் மருத்துவர் மற்றும் அவரது கணவர் தூண்டுதலின் காரணமாக இந்த அபகரிப்பு முயற்சி நடக்கிறது. இது குறித்து புகார் அளித்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். இடத்தை அபகரிக்க முயல்பவர்கள் தங்களை ஆட்களை வைத்து மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அவர்கள் வலியுறுத்தினர்.