கோவை : சிதம்பரம் தொகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
கோவை : சிதம்பரம் தொகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
கோவை போத்தனூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன்அன்சாரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற வன்முறைகளை ம.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறேன். தான் விரும்புபவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ஜனநாயகம் அனைவருக்கும் தந்திருக்கிறது. விளிம்பு நிலை மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளை தமிழக அரசு வழங்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசியது. தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் கைப்பற்றும். இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சிதான் அமைய வாய்ப்புள்ளது, என்றார்.
மேலும், 4 சட்டமன்ற இடைத்தேர்தல் ஆதரவு குறித்து கேட்கபட்ட கேள்விக்கு, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும். தமிழகத்தில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு தொடர் விடுமுறை காரணமாக இருக்கலாம், எனக் கூறினார்.
தொடர்ந்து, உங்கள் மீது கட்சி தாவல் நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் போட்டி, டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க.வின் பொதுச் செயலாளராக தேர்வு உள்ளிட்ட பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- கட்சி தாவல் தடை சட்டம் வந்தால் அதை எதிர்க்கொள்வேன். கொள்கைக்காக பதவி இழந்தாலும் தனக்கு கவலையில்லை. ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். அவருடைய புதிய சினிமா படங்கள் வெளியாகும் சூழலில், இம்மாதிரி அரசியல் பற்றி கூறுவார்.
அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆகியுள்ள டி.டி.வி. தினகரனுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மீது தங்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு, எனக் கூறினார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கட்சியின் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ்.அப்பாஸ், உள்ளிட்ட ம.ஜ.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.