கோவை : நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை : நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, தொகுதி வாரியாக அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, தேர்தல் மேற்பார்வையாளர் ரேணு ஜெயபால் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், ஸ்டிராங் ரூமில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டியளித்ததாவது :- 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும், 112 சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுகிறது. வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இவற்றை கண்காணிக்க தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது பழுதடைந்த 57 விவிபேட் இயந்திரங்கள் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை காவல்துறை கட்டுப்பாட்டில் இந்த வளாகம் இருக்கும், என தெரிவித்தார்.