கோவை : கோவை - பாலக்காடு சாலையில் பல்வேறு வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்ற காரை மடக்கி ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கோவை : கோவை - பாலக்காடு சாலையில் பல்வேறு வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்ற காரை மடக்கி ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இன்று மதியம் KL 07 M 2181 என்ற எண் கொண்ட சொகுசு கார், கோவையிலிருந்து கேரளா நோக்கி அதிவேகமாக சென்றது. அந்த கார் கோவைபுதூரையடுத்த மைல்கல் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் புயல் வேகத்தில் சென்றது. அதைத்தொடர்ந்து, சாலையிலிருந்த தடுப்பில் மோதி நின்றது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் வந்த காரின் ஓட்டுநரை அங்கிருந்த பொதுமக்கள் கடுமையாக தாக்கினர்.

பின்னர், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காருக்குள் இருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் கோவைப்புதூர் அருகேயும், பேரூர் அருகேயும் இருசக்கர வாகனங்கள் மீது மோதியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.