கோவை : கோவை போத்தனூர் அருகே பட்டதாரி இளைஞரின் ஓட்டு, ஏற்கனவே போடப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறிய நிலையில், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியின் நடவடிக்கைக்கு பிறகு அந்த இளைஞர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
கோவை : கோவை போத்தனூர் அருகே பட்டதாரி இளைஞரின் ஓட்டு, ஏற்கனவே போடப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறிய நிலையில், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியின் நடவடிக்கைக்கு பிறகு அந்த இளைஞர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
கோவை போத்தனூர் எஸ்.என்.டி. பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கிருஷ்ணராஜ். பட்டதாரியான இவர் வேலை தேடி வருகிறார். தேர்தல் நாளான இன்று சித்தனாபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் வாக்கு அளிக்க காலை 11 மணியளவில் சென்றார். அப்போது, அவரது ஓட்டு ஏற்கனவே காலை 8 மணிக்கு போடப்பட்டு விட்டதாக வாக்குச்சாவடி ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் கிருஷ்ணராஜ், இது குறித்து தேர்தல் அலுவலரிடம் முறையிட்டு உள்ளார். மேலும், இதுவரை தான் வாக்களிப்பது குறித்து எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல், தன்னை காக்க வைத்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ராசாமணியின் நடவடிக்கை காரணமாக, பட்டதாரி இளைஞர் ராஜேஷ் கிருஷ்ணராஜ் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
இதேபோல, பீளமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வாக்களிக்க சென்றபோது, அவரது வாக்கும் ஏற்கனவே போடப்பட்டு விட்டதாக வாக்குச்சாவடி ஊழியர்கள் கூறியதால், அவர் ஏமாற்றமடைந்தார்.
அண்மையில், சர்கார் படத்தில் நடிகர் விஜயின் ஓட்டை வேறு ஒருவர் போட்டு விட்டதாக கூறிய காட்சிகளைப் போன்று, கோவையில் தற்போது அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.