கோவை : கோவையில் கண்பார்வையற்றவரை வாக்குப்பதிவு செய்ய உள்ளே அழைத்துச் சென்ற அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலருக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், காவல்துறையுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை : கோவையில் கண்பார்வையற்றவரை வாக்குப்பதிவு செய்ய உள்ளே அழைத்துச் சென்ற அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலருக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், காவல்துறையுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை போத்தனூர் பகுதி 100-வது வார்டின் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் வேணுகோபால். இன்று மேட்டூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு கண்பார்வையற்ற சிலரை வாக்களிக்க அழைத்துச் சென்றுள்ளார். மேலும், அவர்களுக்கு உதவியாக வாக்குச்சாவடிக்குள் சென்று உதவுவதாக உள்ளே சென்றார். ஆனால், அங்கிருந்த காவல்துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் அவரை உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். இதையடுத்து, அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவர்கள் அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த நபர்கள் என்றும், அவர்களுடைய வாக்கு வேறு யாருக்கும் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் நான் உதவுகிறேன் என வாக்குவாதம் செய்தார்.
தொடர்ந்து, அவர்களுக்கு தாங்கள் உதவுவதாக அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் கூறியதையடுத்து, அங்கிருந்து அவர் வெளியேறினார். வாக்குச்சாவடிக்குள் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலருக்கும், காவல் துறையினருக்கும் வாக்குவாதம் மூண்டதால் லேசான பரபரப்பு ஏற்பட்டது.