திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் நண்பகல் 1 மணி வரையில் 38 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் நண்பகல் 1 மணி வரையில் 38 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் தொகுதியின் சி.பி.ஐ. வேட்பாளர் சுப்பராயன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்திர குமார் மற்றும் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வாக்குகளை பதிவு செய்தனர். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் நண்பகல் ஒரு மணி நிலவரப்படி 38 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேபோல, படுகர் இன மக்கள் அதிகம் வாழும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீலகிரி நாடாளுமன்ற தொகுதியானது கூடலூர், உதகை, மேட்டுப்பாளையம், பவானி சாகர் உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. அ.தி.மு.க. சார்பில் தியாகராஜனும், தி.மு.க. சார்பில் ஆ. ராசாவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜேந்திரனும், அ.ம.மு.க. சார்பில் ராமசாமியும் போட்டியிட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் படுகர் இன மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இதேபோன்று, கோத்தகிரி பகுதியில் உதகை காந்தல் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் அரை மணி நேரத்திற்குப் பின் வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த வாக்குச்சாவடியில் ஆ. ராசா வெற்றி பெற வேண்டும் என வேண்டி ஒரு தி.மு.க. ஆதரவாளர் வாக்குச்சாவடிக்கு, தேங்காய் கற்பூரம் எடுத்து வந்து சுற்றிப் போட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதற்குள் அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், நீலகிரி (தனி) தொகுதியில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2009-ம் ஆண்டு முதல் தனி தொகுதியாக அறிவிக்கப்பட்ட நீலகிரி தொகுதியில், கடந்த 2014-ம் ஆண்டு 74.60 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நண்பகல் ஒரு மணி வரையில், 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.