கோவை : அரசு மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இறந்த நிலையில் இருந்த சிசுவை உரிய நேரத்தில் அகற்றாததால், கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை : அரசு மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இறந்த நிலையில் இருந்த சிசுவை உரிய நேரத்தில் அகற்றாததால், கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை சிவானந்தா காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சுரேஷ் (38), நிர்மலா (35) தம்பதியினர். நிர்மலா கோவை அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பிரசவத்திற்காக கடந்த ஆறு மாதம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பணிபுரிந்து வரும் மருத்துவர் திலகவதி, செவிலியர் நிர்மலாவிற்கு தனது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தருவதாக அழைத்துச் சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் மருத்துவர் திலகவதி அறிவுறுத்தலின் பேரில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், ஸ்கேன் செய்து பரிசோதனை செய்ததில், குழந்தை வயிற்றில் உள்ளேயே இறந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை மருத்துவர் உடனடியாக வெளியேற்றவில்லை. இந்த நிலையில், நேற்று கர்ப்பிணி பெண்ணுக்கு வலிப்பு ஏற்பட்டது.

ஆனால், அங்கு மருத்துவர்கள் இல்லை. பின்னர், அரசு மருத்துவமனையில் இருந்த மருத்துவர் திலகவதிக்கு தகவல் கொடுத்து, ஒருமணி நேரத்திற்கு மேலாக கால தாமதமாய் வந்தார். பின்னர், அவர் வயிற்றில் இருந்த குழந்தையை அப்புறப்படுத்தினார்.
இதையடுத்து, உறவினர்கள் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு வந்த பொழுது கர்ப்பிணிப் பெண்ணான நிர்மலா மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, அவரை அருகே உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கும் சிகிச்சை கொடுக்க முடியாததால், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள் மருத்துவரின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல, இறந்த குழந்தையை வயிற்றில் இருந்து உடனடியாக வெளியே எடுக்காமல், காலம் தாமதித்து உயிரிழப்பு ஏற்படுத்திய மருத்துவர் திலகவதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.