கோவை : இ.பி.எஸ்., ஒ.பி.எஸ். ஆகியோர் எடுபிடி என்பதை விட பா.ஜ.க.வின் அடிமைகள் எனக் கூறலாம் என்று கோவையில் இறுதிகட்ட பிரச்சாரம் செய்த சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
கோவை : இ.பி.எஸ்., ஒ.பி.எஸ். ஆகியோர் எடுபிடி என்பதை விட பா.ஜ.க.வின் அடிமைகள் எனக் கூறலாம் என்று கோவையில் இறுதிகட்ட பிரச்சாரம் செய்த சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
கோவை ராஜவீதியில் உள்ள தேர் நிலைத்திடலில் சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது :- தமிழகம் முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும், பி.ஆர். நடராஜனுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதை பார்க்க முடிந்தது. நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை வீசுகின்றது. தமிழகத்தில் எடப்பாடி அணிக்கு எதிர்ப்பு அலை வீசுகின்றது. தி.மு.க. தலைவர் ஸடாலின் எழுப்பும் கேள்விகளுக்கு அதிமுக, பா.ஜ.க. சார்பில் பதில் அளிப்பதில்லை.
மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியால் பாதிப்பு இல்லை என பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சொல்கின்றார். 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 50 ஆயிரம் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு, 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். எடப்பாடி அரசை எடுபிடி என்று சொன்னால் கோவித்துக் கொள்கின்றனர்.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி 8 வழிச்சாலை அமைப்போம் என்று சொன்னதற்கும், நீட்தேர்வு தேவை என்று பியூஸ் கோயல் சொன்ன போது ஏன் வாய்திறக்கவில்லை. எடப்பாடியும், ஒ.பி.எஸ். ஆகியோர் எடுபிடி என்பதை விட பா.ஜ.க.வின் அடிமைகள் என்பதை சுட்டிக்காட்டுகின்றேன், என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது :- 23-ம் தேதி வாக்கு எண்ணப்படும் நேரத்தில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதுடன், தமிழகத்திலும் எடப்பாடி ஆட்சியும் தூக்கி எறியப்படும். மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். அதன்பின், இரண்டே மாதத்தில் உள்ளாட்சி் தேர்தல் நடத்தப்பட்டு, அதிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும். நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு பி.ஆர். நடராஜன் பணியாற்றுகின்ற போது, ஊழல் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பார் என்பதை உறுதி செய்கின்றேன்.

வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தினால், அதனால் ஏற்படும் விளைவுகளை தேர்தல் ஆணையம்தான் எதிர்கொள்ள வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையினை சொல்லி ஏன் பா.ஜ.க. எங்குமே ஓட்டு கேட்கவில்லை. சி.பி. ராதாகிருஷ்ணன் மீது ஊழல் வழக்கு இருக்கின்றது. அதில் இருந்து தப்பிக்க நாடாளுமன்ற உறுப்பினராக பார்க்கின்றார். ஒவ்வொரு வாக்கும் நீட் தேர்விற்கு எதிராகவும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவும், கல்வி கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வாக்குகள் என்பதை உணர வேண்டும்.
5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு கொண்டு வந்து மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க முயல்கின்றது. அமைதி பூங்காவாக கோவை இருக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட அணி மதசார்பற்ற முற்போற்கு கூட்டணி. அந்த அணி மதவெறி அணி. கோவையில் எல்லாம் சிறப்பாக இருக்கின்றது என்று ஒரு வேட்பாளர் பொய்களை கட்டவிழ்த்துக்கொண்டு இருக்கின்றார். அவர்களுக்கு பாடம் புகட்டும் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் பேசுகையில், "வட இந்தியாவில் பா.ஜ.க. எங்கும் ஜெயிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் வீடுகளில் வருமான சோதனை நடத்தாதா..? பொள்ளாச்சி விவகாரத்தில் போலீசுக்கு எதுவும் தெரியாதா..?. வரும் மே 23-ம் தேதிக்கு பின்னர் எல்லா உண்மைகளும் வெளிவரும். வேட்பாளரின் தரம் மற்றும் பணிகளை பார்த்து வாக்களிக்க வேண்டும்," என்றார்.
