கோவை : அத்திக்கடவு – அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மேட்டுப்பாளையம் பவானியாற்று நீரை எடுத்து தீர்த்தக்குட யாத்திரை நடத்தி கிராம கோவில்களில் வழிபாடு நடத்தினர்.
கோவை : அத்திக்கடவு – அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மேட்டுப்பாளையம் பவானியாற்று நீரை எடுத்து தீர்த்தக்குட யாத்திரை நடத்தி கிராம கோவில்களில் வழிபாடு நடத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் சேரும் உபரி நீரை திருப்பி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சியான கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளை நிரப்பும் திட்டமே அத்திக்கடவு – அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாகும். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள், சிறு நகரங்கள் பெரிதும் பயன்பெறும் இத்திட்டத்தை நிறைவேற்ற பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், ஒவ்வொரு ஆண்டும் போராட்டக்குழு சார்பில் சித்திரை முதல் தேதியன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்திர காளியம்மன் கோவிலில் வழிபாடு செய்த பின்னர், கோவிலின் அருகே ஓடும் பவானியாற்றில் இருந்து நூற்றுக்கணக்கான குடங்களில் நீர் எடுத்து தீர்த்தக்குட யாத்திரை நடத்தப்படுகிறது. யாத்திரையாக குடங்களோடு தங்களது கிராமங்களுக்கு சென்று அங்குள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளை செய்து வருகின்றனர்.
60 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின்னர், தற்போது இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகளுக்கு ரூ. 1,632 கோடி ஒதுக்கப்பட்டு இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அவிநாசி அத்திக்கடவு திட்டத்தினை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி சித்திரை முதல் தேதியான இன்றும் அன்னூர், வடவள்ளி, குப்பேபாளையம், பிள்ளையப்பம்பாளையம், தெக்கலூர், நம்பியாம்பாளையம் உள்ளிட்ட பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்த குடங்களில் பவானியாற்று நீரை சேகரித்து ஆற்றங்கரையில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினர். பின்னர், இக்குடங்களை தங்களது ஊர்களுக்கு யாத்திரையாக எடுத்து சென்று கிராம கோவில்களில் உச்சிகால பூஜைகள் நடத்தினர்.