கோவை : ராமநாதபுரம் அருகே தனியார் இடத்தில் இருந்த 60 ஆண்டுகள் பழமையான ஆலமரம் 14 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
கோவை : ராமநாதபுரம் அருகே தனியார் இடத்தில் இருந்த 60 ஆண்டுகள் பழமையான ஆலமரம் 14 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் அருகே உள்ள ருக்மணி நகர் பகுதியைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் வீணாகுமாரி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட முடிவு செய்தார். ஆனால், இவரது கட்டுமானப் பணிகளுக்கு இரண்டு மரங்கள் இடையூறாக இருந்துள்ளன. எனவே, இவற்றை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என முடிவு செய்து, ஓசை அமைப்பைச் சேர்ந்த சையத்தை தொடர்பு கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து, ஓசை அமைப்பின் பங்களிப்புடன் தன்னார்வலர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் உதவியுடன் 14 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு 60 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இடமாற்றம் செய்யப்பட்டது.

"எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன், வருவாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அனுப்பிய உபகரணங்கள் மற்றும் பணியாட்களைக் கொண்டு பணியினை தொடங்கினோம்," என்றார் ஓசை சையத்
மேலும், இரண்டு மரங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டது போல இருந்தால், அவற்றை வேரோடு பிடுங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தனித்தனியே பிரிப்பது முக்கியம் இல்லை எனக் கருதி, இரண்டையும் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டுள்ளது. பின்னர், லாரியின் உதவியுடன் 13 கி.மீ. கடந்து காளப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

"பெரும் போராட்டத்திற்குப் பிறகு பல்வேறு தடைகளை தாண்டி லாரியில் மரம் கொண்டு செல்லப்பட்டது. சாலையோரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மரங்களின் கிளைகள் மிகவும் தாழ்வாக இருந்ததால், இடையூறு ஏற்பட்டது. இருப்பினும், சாலையோரத்தின் இருக்கும் மரங்கள் சேதமடையக் கூடாது என்பதற்காக, சுமார் 3 மணிநேரம் காத்திருந்து சென்றோம்," எனக் கூறினார் சையத்.
இந்த ஆபரேசனில் வருவாய், தேசிய நெடுஞ்சாலை, காவல்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், கோவை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன.

மரங்களை இடமாற்றம் செய்யும் பணியில் கோவை மாநகர் பிற நகரங்களைக் காட்டிலும் முன்னிலை வகிப்பதாக ஓசை அமைப்பைச் சேர்ந்த சையத் தெரிவித்தார்.
அண்மையில் கர்நாடக மாநிலத்தில் ஹுப்பள்ளி - கடாக் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் சுமார் 500 மரங்களை இடமாற்றம் செய்யும் பணியில் சையத்தின் பங்களிப்பும் இருப்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 100 மரங்களை இடமாற்றம் செய்யும் பணிகளில் பங்கெடுத்துள்ள சையத், கோவையில் மட்டும் தனி ஒருநபராக இருந்து 60 மரங்களை இடமாற்றம் செய்துள்ளார்.