கோவை : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சூலூர், பல்லடம் பகுதிகளில் அ.ம.மு.க.வின் ஆதரவு அலை அதிகரித்து வருகிறது. இதனால், வாக்குகள் பிரிந்து போகும் சூழலால், கோவை நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இருக்கும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கோவை : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சூலூர், பல்லடம் பகுதிகளில் அ.ம.மு.க.வின் ஆதரவு அலை அதிகரித்து வருகிறது. இதனால், வாக்குகள் பிரிந்து போகும் சூழலால், கோவை நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இருக்கும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்த தினகரனால் தொடங்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் போட்டியிடுகிறது. அந்த வகையில், கோவை நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வின் முன்னாள் மூத்த தலைவர் 67 வயதான அப்பாதுரை அ.ம.மு.க. சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். என்னதான், அ.தி.மு.க.வில் பல பொறுப்புகளை வகித்திருந்தாலும், கோவை தொகுதியில் கடும் சவாலாக இருக்கும் பா.ஜ.க.வின் சி.பி. ராதாகிருஷ்ணன், சி.பி.எம்.மின் பி.ஆர். நடராஜன் ஆகியோருக்கு இருக்கும் மவுசு அப்பாதுரைக்கு சற்று குறைவுதான்.
அண்மையில் வெளியான கருத்துக் கணிப்புகளின்படி, கோவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலிடத்தையும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 2-வது இடத்தையும், தினகரனின் அ.ம.மு.க. 3-வது இடத்தை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது. கோவையில் போதிய பிரபலம் இல்லாவிட்டாலும், மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளில் அப்பாதுரைக்கு பெரும்பாலான ஆதரவு இருக்கிறது.

முந்தைய காலங்களில் பொள்ளாச்சி சடையகவுண்டன்புதூரில் இருந்து பட்டப்படிப்பை படித்த அப்பாதுரை, 1989-ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையின் கீழ் கிணத்துக்கடவு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, 2-ம் இடத்தை பிடித்தார். 1972-ம் ஆண்டில் அ.தி.மு.க.வில் இணைந்தது முதல் தீவிர நிர்வாகியாக வலம் வந்த அவர், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் கட்சியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். மேலும், பொள்ளாச்சி பகுதிகளில் மத்திய செயலாளர், மாவட்ட இணை செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சியின் போது, 1992-1996-ம் ஆண்டு வரையில் ஆவின் தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடியால், பெரும்பாலான தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அப்பாதுரை தினகரன் பக்கத்தினருக்கு ஆதரவு தெரிவித்தார். கடந்த ஆண்டு கட்சியின் தொண்டர்கள் வடவள்ளியில் கைது செய்யப்பட்ட போது, தினகரனுக்கு அப்பாதுரை தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் வேட்பாளராக அப்பாதுரை அறிவிக்கப்படுவார் என ஒருசிலர் தெரிவித்து வந்தாலும், முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரையின் மகன் செந்திலின் பெயரும் அடிபட்டு வந்தது.
இந்த நிலையில், சேலஞ்சர் துரை, சின்னசாமி ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அப்பாதுரை கோவையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தனது ஆதரவாளர்களுடன், அப்பாதுரைக்கு கோவை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஆதரவு அலை அதிகரித்து வருகிறது. இதன் மூலம், இந்தத் தேர்தலில் முன்னிலை பெறாவிட்டாலும், பிற முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களின் வாக்குகளை பிரித்தெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இது தொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறியதாவது :- கோவை மாவட்டத்தில் தேவர் சமுதாயம் இருக்கும் பகுதிகளில் டிடிவி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. பெரும் வாக்கு வங்கியை உருவாக்கி உள்ளது. கடந்த வாரம் கோவைக்கு வருகை புரிந்த தினகரனுக்கு ராமநாதபுரத்தில் ஆரவாரமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பெரும்பாலான அ.தி.மு.க. தொண்டர்களும், தினகரன் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.

மேலும், கோவை தொகுதிக்குட்பட்ட சூலூர், பல்லடம் உள்ளிட்ட பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் நாளுக்கு நாள் அ.ம.மு.க.விற்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. அதேவேளையில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் மற்றும் அடிமட்ட தொண்டர்களின் பங்களிப்பே இதற்கு காரணம். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசுகளாக இ.பி.எஸ்., ஓபி.எஸ். அணியினர் இருக்க முடியாது என்பது பெரும்பாலான அ.தி.மு.க. தொண்டர்களுக்கு தெரியும். தினகரன் மட்டுமே அதற்கு உரித்தானவர் என்பது அ.தி.மு.க.வில் இருப்பவர்களுக்கு தெரிந்த ஒன்றாகும். இது ஒருபகுதியில் மட்டுமல்லாது, இனி வரும் காலங்களில் மாநிலத்தில் உள்ள அனைத்து அ.தி.மு.க., தொண்டர்களும் டிடிவி தினகரன் பக்கம் வருவார்கள், என்றனர்.