2014 நாடாளுமன்ற தேர்தல் களத்தில் மோடி அலையும், காங்கிரஸ் எதிர்ப்பலையும் நாடு முழுக்க வீசியது. கோவை மக்களவை தொகுதியில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். பிரபலமான சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து கோவை தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட அதிமுக, கட்சியில் கூட பிரபலம் இல்லாத ஏ.பி.நாகராஜனை நிறுத்தியது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக எளிதாக வெற்றி பெறுமென சொன்னது. ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில் தனித்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாகராஜன் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு ஒரே காரணம் அதிமுக வாக்கு வங்கி.
2014 நாடாளுமன்ற தேர்தல் களத்தில் மோடி அலையும், காங்கிரஸ் எதிர்ப்பலையும் நாடு முழுக்க வீசியது. கோவை மக்களவை தொகுதியில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். பிரபலமான சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து கோவை தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட அதிமுக, கட்சியில் கூட பிரபலம் இல்லாத ஏ.பி.நாகராஜனை நிறுத்தியது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக எளிதாக வெற்றி பெறுமென சொன்னது. ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில் தனித்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாகராஜன் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு ஒரே காரணம் அதிமுக வாக்கு வங்கி.

2019 நாடாளுமன்ற தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்த தேர்தலில் முதலிரண்டு இடங்களை பிடித்த அதிமுக, பாஜக ஒரே கூட்டணியில் உள்ளன. அடுத்த மூன்று இடங்களை பிடித்த திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் ஒரே கூட்டணியில் சேர்ந்துள்ளன. கட்சிகள் மாறியது போல, வாக்காளர்களின் மனநிலையும் மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள தொகுதியாக கோவை இருக்கிறது. அதேசமயம் தேர்தல் களத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் போட்டியாக இருக்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பினால் ஏற்பட்ட தொழில் பாதிப்புகள், கடந்த தேர்தலில் இருந்த மோடி ஆதரவு அலை ஓய்வு, எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மத்திய அரசின் செயல்பாடின்மை, ஆளுங்கட்சி அதிருப்தி, சிறுபான்மை வாக்கு இழப்பு என பாஜகவிற்கு பாதகமான அம்சங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இவற்றை மீறி வெற்றியை எட்டி பிடிக்க பாஜக பெரிதும் நம்பியிருப்பது, அதிமுக வாக்கு வங்கியை மட்டுமே. ஆனால் அவை முழுமையாக பாஜகவிற்கு வந்து சேருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
மானப்பிரச்சணை
அதிமுக கட்சியின் துவக்க காலம் தொட்டே, கோவை அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது. அதிமுகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரை தந்ததும் கோவை தான். தொடர்ந்து அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கோவை மாவட்டம் அதிமுகவிற்கு கொடுத்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 9 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுக வென்றது.
கோவை மாவட்டத்தில் செல்வாக்கும், அதிகாரமும் மிக்க அமைச்சராக எஸ்.பி.வேலுமணி வலம் வருகிறார். எப்படியும் பாஜகவை வெற்றி பெற வைக்க வேண்டுமென முனைப்பில் உள்ளார். அதனால் தான் “பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து நமது மானத்தை காப்பாற்ற வேண்டும்” என சொல்லி வரும் எஸ்.பி.வேலுமணி, இதனை மானப்பிரச்சணையாக பார்க்கிறார். ஏனெனில் அதிமுக செல்வாக்கு மிக்க பகுதியாக கோவை இருப்பதே காரணம்.

அதிமுக வாக்கு வங்கி
அதிமுக வாக்கு வங்கி வகைகளை மூன்றாக பிரிக்கலாம். அதில் முதலாமனவர்கள் இரட்டை இலை என்ற சின்னத்திற்காக வாக்களிப்பவர். எம்.ஜி.ஆர், இரட்டை இலை என வாக்களித்து பழகியவர்கள். ஜெயலலிதா என்ற ஆளுமைமிக்க முகத்திற்காக வாக்களிப்பவர்கள் இரண்டாவது வகையினர். திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில் அதிமுகவிற்கு வாக்களிப்பவர்கள் மூன்றாம் வகையினர்.

இந்த மூன்று வகையினருக்கும் இந்த தேர்தலில் ஒவ்வொரு சிக்கல் உள்ளது. அவற்றை அனைத்தையும் சேர்த்தாக கோவை மக்களவை தொகுதி உள்ளது. ஜெயலலிதா இல்லாத முதல் நாடாளுமன்ற தேர்தல். இரட்டை இலை கோவையில் போட்டியிடவில்லை. கூட்டணியில் உள்ள தாமரை போட்டியிடுகிறது. திமுகவும் நேரடியாக போட்டியிடவில்லை. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் போட்டியிடுகிறது.
வாக்கு வங்கி சிக்கல்கள்
தமிழக அரசியலில் ஆளுமைமிக்க தலைவராக இருந்த ஜெயலலிதா இல்லாத முதல் நாடாளுமன்ற தேர்தல் இது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடந்த ஒரே தேர்தல் என்றால் அது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். இரட்டை இலை சின்னம் இருந்தும் சுயேட்சையாக சின்னமான குக்கர் சின்னத்திடம் தோல்வியடைந்தது. அதிமுக வாக்குகளை பிரிக்க மட்டுமே முடியுமென நினைத்த டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

தர்மயுத்தத்தின் போது ஒ.பன்னீர்செல்வம் மீது மக்களுக்கு இருந்த ஆதரவு, அணிகள் இணைப்பிற்கு பிறகு இல்லை. முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி செயல்பாடுகள் மீதும் அதிருப்திகள் உள்ளன. ஆனால் கொங்கு மண்டலத்தை சேர்ந்த முதலமைச்சர் என்பது இங்கு சாதகமாக உள்ளது. இருப்பினும் இருவரையும் ஆளுமைமிக்க தலைவர்களாக மக்கள் பார்க்கவில்லை. பாஜகவுடான கூட்டணியினால் அதிமுகவிலும் சில அதிருப்தி குரல்கள் இருக்கவே செய்கின்றன
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுக வாக்குகளை கணிசமாக பிரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை இலையின் வாக்கு வங்கியை குறி வைத்தே, பரிசு பெட்டகமும் களம் காண்கிறது. தமிழகம் முழுக்க பரவலாக பாஜக எதிர்ப்பலை வீசுகிறது. பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தோடு பல கட்சிகளும், அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா என்ற ஆளுமை முகத்திற்காக வாக்களித்தவர்கள் தொடர்ந்து இந்த முறையும் வாக்களிப்பார்களா என்பதும், இரட்டை இலைக்கு வாக்களித்தவர்கள் தாமரைக்கு வாக்காளிப்பார்களா என்பதும் கேள்வியாகவே உள்ளது. டிடிவி தினகரன் அணியால் திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல், முழுமையாக பாஜகவிற்கு சேருமா என்பதும் கேள்வி தான்.
அதிமுக வழக்கமாக கோவை தொகுதியை கூட்டணிக்கே ஒதுக்கும். அந்த கட்சிகளை கோவை மக்கள் வெற்றி பெறவும் வைத்துள்ளனர். தோல்வியடையவும் வைத்துள்ளனர். ஆனால் இந்த முறை ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாத சூழலில், அதிமுக வாக்குகளை பிரிக்க தயாராக நிற்கும் அமமுகவின் பரிசு பெட்டகத்தை தாண்டி இரட்டை இலையின் வாக்கு வங்கி முழுமையாக தாமரையில் ஐக்கியமாகி வெற்றியை சாத்தியமாக்குமா என்பத பொறுத்திருந்து பார்ப்போம்.