கோவைக்கான செயல் திட்டம் எந்த கட்சியின் தேர்தல் அறிக்கை சிறந்தது? – ஒரு அலசல்

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், இந்த தேர்தலில் முக்கிய கட்சிகள் கோவைக்கு என தனியாக செயல் திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. தேசிய, மாநில அளவில் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், கோவை மக்களவை தொகுதிக்கு என செயல் திட்டங்களை அரசியல் கட்சிகள் மக்களிடம் முன்வைத்துள்ளன. வாக்குறுதி என்பதை செயல் திட்டமாக வெளியிட்டு, வாக்காளர்களை கவர முக்கிய கட்சிகள் முன்வந்துள்ளன. பாஜக, மார்க்சிஸ்ட், மநீம, நாம் தமிழர் ஆகிய முக்கிய கட்சிகள் செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளன. சுயேட்சையாக போட்டியிடும் அமமுக தனியாக வெளியிடவில்லை.



எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், இந்த தேர்தலில் முக்கிய கட்சிகள் கோவைக்கு என தனியாக செயல் திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. தேசிய, மாநில அளவில் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், கோவை மக்களவை தொகுதிக்கு என செயல் திட்டங்களை அரசியல் கட்சிகள் மக்களிடம் முன்வைத்துள்ளன. வாக்குறுதி என்பதை செயல் திட்டமாக வெளியிட்டு, வாக்காளர்களை கவர முக்கிய கட்சிகள் முன்வந்துள்ளன. பாஜக, மார்க்சிஸ்ட், மநீம, நாம் தமிழர் ஆகிய முக்கிய கட்சிகள் செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளன. சுயேட்சையாக போட்டியிடும் அமமுக தனியாக வெளியிடவில்லை.

பாஜகவின் எட்டு பரிமாண வளர்ச்சி திட்டம்

கோவை மக்களவை தொகுதிக்கான 20 பக்கங்களை கொண்ட பாஜகவின் செயல்திட்ட அறிக்கையை, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வெளியிட்டார். இந்த அறிக்கை விவசாயம், பொருளாதாரம் மற்றும் தொழில், கல்வி, நிர்வாகம், கலாச்சாரம், சுகாதாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு ஆகிய கோவைக்கான எட்டு  பரிமாண வளர்ச்சி திட்டங்களை கொண்டதாக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. 



பாரதம் காக்க போரில் உயிர்தியாகம் செய்த இராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் போர் நினைவு சின்னம் உருவாக்கப்படுமென்பது பாஜகவின் முதல் செயல் திட்டமாக இடம் பெற்றுள்ளது. புதிய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட் ஆப் விரைவுப்படுத்தும் மையம், போக்குவரத்து கட்டமைப்பு, சிறு, குறு பொறியியல் தொழில்களுக்கு தொழில் நுட்ப மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு, கோவை – மதுரை பகல் நேர ரயில், கோவை – பெங்களூரு இரவு நேர ரயில் மற்றும் சென்னைக்கு கூடுதல் ரயில் ஆகியவை அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன.

விவசாயத்தில் நீர்பாசனம் சார்ந்து நீண்ட கால கோரிக்கைகளான அத்திக்கடவு – அவநாசி திட்டம், பாண்டியாறு – புன்னம்புழா திட்டம் மற்றும் ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை முழுமையாக செயல்படுத்துதல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. விளை பொருட்களை ஏற்றுமதி செய்ய குளிர்சாதன வசதியுடன் கூடிய ஏற்றுமதி மையம், கொப்பரை தேங்காய்களுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கூறப்பட்டுள்ளது. 

உட்கட்டமைப்பு சார்ந்து மெட்ரோ ரயில் திட்டம், போத்தனூர், வடகோவை, பீளமேடு ரயில் நிலையங்கள் மேம்பாடு, விமான நிலைய விரிவாக்கம் மற்றும் விமான சேவை அதிகரித்தல், பஸ் போரட், துணை நகரங்கள், தொழிலாளர்களுக்கு விடுதி வசதி, வர்த்தக மையங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவற்றிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் தொழில் சார்ந்து ஜிஎஸ்டி வரி குறைப்பு, சிறுதொழில் உற்பத்தி பொருட்கள் மற்றும் விசைத்தறி ஜவுளி வணிக வளாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பேட்டைகள் உருவாக்குதல் உளாளிட்டவையும், கல்வி சார்ந்து ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்கள் அமைத்தல், சுற்றுச்சூழல் சார்ந்து நீர்நிலைகள் மேம்பாடு, பசுமை கோவை உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக உள்ளது

நிர்வாகம் பிரிவில் மக்களவை உறுப்பினர் அலுவலகம் மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் செயலி மூலம் எம்.பி.யை தொடர்பு கொண்டு பிரச்சணைகளுக்கு தீர்வு காணுதல், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்கான அவசர பாதுகாப்பு செயலி, சுற்றுலா பிரிவில் சுற்றுலா மேம்பாடு, சுகாதார பிரிவில் அரசு மருத்துவமனை மேம்பாடு, கலாச்சார பிரிவில் ஆண்டுதோறும் தமிழ் இலக்கிய திருவிழா, கிராமிய விளையாட்டு திருவிழா உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

மார்க்சிஸ்டின் ‘திறன்மிகு கோவை, அதுவே நம் தேவை’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘திறன்மிகு கோவை, அதுவே நம் தேவை’ என்ற பத்து பக்க தேர்தல் அறிக்கை  மத்திய அரசால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் வியாபாரிகளால் வெளியிடப்பட்டது. கோவையின் அடையாளங்களான சிறுவாணி குடிநீரையும், சிறு, குறுந்தொழில்களையும் மீட்போம் என்பது முதல் முழக்கமாக உள்ளது. தொழில் மேம்பாடு பிரிவில் ஜிஎஸ்டி வரி குறைப்பு, மத்திய தொழில் நிறுவனம், சிறு, குறு தொழில் முனைவோருக்கான நலவாரியம், பம்புசெட்டுகளை அரசு துறைகளுக்கு நேரடியாக கொள்முதல், விசைத்தறிகளின் வங்கி கடன் தள்ளுபடி, பல்லடம், சோமனூரில் ஜவுளி பூங்கா மற்றும் ஜவுளி சந்தை உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக உள்ளன. 



சமூக அமைதி, தலித் மக்களை நகருக்குள் மீள்கூடியேற்றம், மனித கழிவை மனிதரே அள்ளும் அவலத்திற்கு முடிவு கட்ட நவீன கருவிகளை பயன்படுத்துதல், துப்புரவு பணியாளர் பணி நிரந்தரம், இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதி உள்ளிட்ட தொழிலாளர் நலன், கிரிக்கெட் மற்றும் கால்பந்து மைதானங்கள், வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல், மத்திய தொழில்நுட்ப பல்கலைகழகம், மேலிண்மை கல்வி நிறுவனம், போட்டி தேர்வுகளுக்கான நூலகம், அரசு மருத்துவமனை மேம்பாடு,அத்திக்கடவு குடிநீர் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம், பெண்கள் பாதுகாப்பு, கோவையின் முற்போக்கு பண்பாட்டு கூறுகளை பாதுகாத்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளன

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் கெயில் பைப்லைன் மற்றும் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைத்தல், ஆனைமலையாறு – நல்லாறு அணை திட்டம், வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்தல், நாட்டுக்கோழி ஆராய்ச்சி மையம், போக்குவரத்தை சீராக்க புதிய போக்குவரத்து ஏற்பாடுகள், மெட்ரோ ரயில், பெங்களூரு, சென்னைக்கு கூடுதல் ரயில் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. செயல் திறன் கொண்ட வேட்பாளர், அமைதிக்கான வேட்பாளர், எளிதில் அணுக கூடிய வேட்பாளர் என்பதை சுட்டிக்காட்டி, தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மநீமவின் கோவை வழிநடத்தும் தமிழகத்தை!

மக்கள் நீதி மய்யத்தின் ‘கோவை 2024 - கோவை வழிநடத்தும் தமிழகத்தை!’ என்ற 4 பக்க செயல் திட்ட அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். தொழில்துறை வளர்ச்சி, குடிநீர், உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு, விவசாயம், மாசில்லா சக்தி, சுற்றுப்புற சூழல், திறன்சார் தலைநகரம், சமுதாய தலைப்புகளில் மொத்தம் 24 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் கோரிக்கைகள் எந்த ஆண்டில் இருந்து வைக்கப்படுகிறது, எப்போது நிறைவேற்றுவோம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



தொழில் துறை வளர்ச்சி பிரிவில் புதிதாக தொழிற்பேட்டைகள் அமைத்து, ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, பில்ட் இன் கோவை திட்டத்தின் கீழ் சிறப்பு முதலீட்டு மண்டலமாக மேம்படுத்துதல் முதல் வாக்குறுதியாக உள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பு, குறுந்தொழில் மேம்பாடு,திறன் மேம்பாடு, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, ஸ்டார்ட் ஆப் ஹப் ஆகியவை அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.குடிநீர் பிரிவில் 24 மணி நேர குடிநீர், அத்திக்கடவு – அவநாசி, பாண்டியாறு – புன்னம்புழா திட்டங்களை செயல்படுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.  உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு பிரிவில் குடிசை இல்லா தமிழகம், விமான நிலைய மேம்பாடு, அரசு மருத்துவமனை மேம்பாடு, மெட்ரோ ரயில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளிட்டவை கொண்ட ஒருங்கிணைந்த ஸ்மார்ட் நகரம், கோவை – பெங்களூரு இரவு நேர ரயில், வடகோவை, பீளமேடு ரயில் நிலைய மேம்பாடு மற்றும் சாலை இணைப்பு ஆகியவை கூறப்பட்டுள்ளது

விவசாயம் பிரிவில் மாதிரி விளை நிலங்கள் மூலம் உயர் தொழில்நுட்ப முறைகளை கொண்டு ஒரு ஏக்கருக்கு வருடம் இரண்டு இலட்ச ரூபாய் இலாபம், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை, உழவர் சந்தை ஆகியவையும், சூரிய மின் உற்பத்தி பூங்கா, நகர்புற காடு வளர்ப்பு, நீர்நிலை மறுசீரமைப்பு, மனித – வனவிலங்கு மோதலை தடுக்க யானை வழித்தடங்கள் பாதுகாத்தல், 50 மாதிரி ஹைடெக் பள்ளிகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. வார்டுகள் அளவில் குழுக்கள் அமைத்து, சமூக நலன் கொண்ட இளைஞர் ஒருவரை ‘வார்ட்கேப்டனாக’ நியமித்தல் முக்கிய அம்சமாக உள்ளது.

நாம் தமிழரின் மூன்று முழக்கங்கள்

முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியும், கோவை மக்களுக்கான செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் தேர்தல் களத்தில் 3 முழக்கங்களை முன்வைத்துள்ளது. அவை

1. சுகாதாரமான கோவை (கொசு இல்லாத கோவை)

2. நீர்வளமிக்க கோவை (தாகம் இல்லாத கோவை)

3. தொழில்மிகு கோவை

இந்த மூன்று முழக்கங்களை மையமாக கொண்டு, ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்களை உயிர்ப்பிப்போம், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்கான நலவாரியம், மது ஒழிப்பு மற்றும் மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம், இளைஞர்களுக்கான வேவை வாய்ப்பு மற்றும் திறன்வள மேம்பாட்டு மையம், சென்னை – கோவை இடையே அதிக ரயில்களை இயக்குதல், விவசாயிகளுக்கான தானிய பாதுகாப்பு கிடங்கு, சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் உரிமையை மீட்டு கட்டணமில்லாமல் வழங்குதல் ஆகியவற்றை செயல் திட்ட வாக்குறுதியாக அளித்துள்ளனர்.

சிறந்த அறிக்கை

கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளில் இருந்தே, யார்யாரை வாக்கு வங்கியாக குறிவைக்கின்றன என்பதையும் உணர முடியும். குறுந்தொழில் முனைவோர், சிறுபான்மையினர், தலித் மக்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை பிரதிபலிக்கும் அறிக்கையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை உள்ளது. தொழிலதிபர்கள், உயர் தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிப்பதாக பாஜக அறிக்கை உள்ளது. மற்றவைகளின் அறிக்கை பொதுவானதாக உள்ளது. 

அதேசமயம் ஜிஎஸ்டி வரிகுறைப்பு, தொழில் வளர்ச்சி, நீர்பாசனம், மெட்ரோ மற்றும் ரயில் சேவை உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவோம் என அனைத்து கட்சிகளும் வாக்குறுதி அளித்துள்ளன. ஒரே மாதிரியான செயல் திட்டத்தையே இந்த கட்சிகள் முன்வைத்துள்ளன. வார்த்தைகள் மாறினாலும், வாக்குறுதிகள் ஒன்றாகவே இருக்கின்றன. 

எது மக்களிடம் எடுபடும் சிறந்த அறிக்கை என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்!

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...