கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா இன்று வீதி வீதியாக சென்று பரப்புரை மேற்கொண்டார்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா இன்று வீதி வீதியாக சென்று பரப்புரை மேற்கொண்டார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குப்பட்ட மேட்டுப்பாளையத்தில் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் ஆ.ராசா தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டார். மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளை சேர்ந்த கிராமப் பகுதிகளில் இன்று ஆ. ராசா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிராமம் கிராமமாக வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், ஆங்காங்கே நின்று பொதுமக்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது :- மத்தியில் ஆளும் மதவாத மோடி அரசை நீக்கிவிட்டு ராகுல் காந்தி தலைமையில் மத்திய ஆட்சி அமையவும், மாநிலத்தில் உள்ள ஊழல் நிறைந்த எடப்பாடி பழனிசாமி அரசை அகற்றி விட்டு தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையவும் மக்கள் வாக்களிக்க வேண்டும். நான் ஏற்கனவே இப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளேன். கடந்த முறையை காட்டிலும் மேலும், சிறப்பாக மக்கள் பணியாற்றிட எனக்கு வாக்களிக்க வேண்டும். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் இரண்டு இடங்களில் எம்.பி அலுவலகம் திறந்து பணியாற்றியவன் என்ற முறையில், மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும், என கோரிக்கை விடுத்து வாக்கு கேட்டார்.
தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா பிரச்சாரத்திற்கு சென்ற ஒவ்வொரு பகுதியிலும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.