கோவை : வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய நிர்பந்தம் அளிப்போம் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை வேட்பாளர் பி.ஆர். நடராஜன் இன்று நடைபெற்ற பிரச்சாரத்தின் போது வாக்காளர்களிடம் உறுதியளித்தார்.
கோவை : வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய நிர்பந்தம் அளிப்போம் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை வேட்பாளர் பி.ஆர். நடராஜன் இன்று நடைபெற்ற பிரச்சாரத்தின் போது வாக்காளர்களிடம் உறுதியளித்தார்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் இவர் இன்று வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார். கே.கே.புதூர் பகுதியில் தொடங்கி, சாயிபாபா காலணி, கருணாநிதி நகர், பெரியார் நகர், தயிர்இட்டேரி, ரத்தினபுரி, சம்பத்வீதி, டெக்ஸ்டூல், ரூட்ஸ் பாலம், காமராஜபுரம், கண்ணப்ப நகர், சங்கனூர்சாலை, நல்லாம்பாளையம், மணியகாரன்பாளையம், பகத்சிங் புரம், சிவசக்தி காலனி, கணபதிபுதூர், கணபதி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

பிரச்சாரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது :- மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழகமே எதிர்க்கிற திட்டத்தை வலிய திணித்து வருகிறது. ஒக்கி, கஜாபுயல் பாதிப்புக்குள்ளாகி தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களின் மக்கள் திரண்டு ஆதரவு கரம் நீட்டிய நிலையிலும், மத்திய மோடி அரசு மாற்றாந்தாய் மனப்போக்கோடு நடந்து கொண்டது. இதனை எதிர்த்து மாநிலத்தின் உரிமையைப் பாதுகாக்க வக்கற்ற அரசாக எடப்பாடி அரசு இயங்குகிறது.
தமிழக மக்களின் நலன் குறித்து எவ்வித கவலையும் கொள்ளாமல் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும், ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமே இலக்காக செயல்பட்டு வருகிறது. பொள்ளாச்சி சம்பவத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாத எடப்பாடி அரசு அம்மாவின் ஆட்சி என்று சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்.
கடந்த மூன்று வருடங்களாக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் சாதாரண அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. அதேநேரம், உள்ளாட்சி தேர்தலை நடத்த வக்கற்ற இந்த அ.தி.மு.க. அரசு சர்வாதிகரத்தனமாக வீட்டுவரி, சொத்துவரி, தண்ணீர்வரி, குப்பைவரி என நூறு மடங்கு வரியை உயர்த்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிகள் மாமன்றத்தில் விவாதித்து வரியை நிர்ணயிக்காமல் தான்தோன்றித்தனமாக மக்களின் மீது பெரும் சுமையை ஏற்றியது எடப்பாடி அரசு.

மக்களின் தாகத்திற்கான குடிநீரைக்கூட அந்நிய நிறுவனமான சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இதனால், பொதுக்குழாய்கள் அகற்றப்படும். தண்ணீர் காசு கொடுத்தால்தான் கிடைக்கும் என்கிற நிலை இந்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., வேலுமணியின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்த தொடர் போராட்டத்தில் பங்கேற்றவன் என்கிற முறையில் கோவை மக்களிடம் வாக்கு கேட்கிறேன். புதிய அரசு அமைந்தவுடன் அநியாய சொத்து வரி உள்ளிட்ட அனைத்தையும் ரத்து செய்யவும், அவதிக்குள்ளாகியுள்ள மக்களின் சுமையைக் குறைக்கவும் உறுதியான நடவடிக்கை எடுப்பேன், என்று வாக்குறுதி அளித்தார்.
பிரச்சாரத்தில் தி.மு.க. மாநகர் மாவட்ட பொறுப்பு செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக், காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சியின், முஸ்லிம் லீக், ம.ம.க., ம.ஜ.க., ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பங்கேற்று வாக்கு சேகரிப்பு பயணத்தில் ஈடுபட்டனர்.