திருப்பூர் : திருப்பூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர் : திருப்பூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. முதற்கட்டமாக, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குழுவுக்கு 4 பேர் வீதம் 60 குழுக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள 362 வாக்குச்சாவடிகளுக்கு, 20 சதவீத கூடுதல் இயந்திரங்களுடன் 434 இயந்திரங்களிலும், திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள 233 வாக்கு சாவடிகளுக்கு 44 கூடுதல் இயந்திரங்களுடன் 279 இயந்திரங்களிலும் வேட்பாளர் பெயர் மற்றும் அவர்களது சின்னம் பொருத்தப்பட்டு தயார்படுத்தும் பணிகள் அனைத்து கட்சி வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், நினைவகம், ஒப்புகை சீட்டு இயந்திரங்களை வகைப்படுத்தி பிரிப்பதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, முதல் வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தும் பணி காலை 9 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12 மணிக்கே முடிவடைந்தது. இயந்திரங்கள் பொருத்தும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, இயந்திரங்களை வகைப்படுத்தி பிரிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன், பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார். இன்று மாலைக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டிய நிலையில், நாளையும் இயந்திரங்கள் தயார்படுத்தும் பணி தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.