கோவை : சட்டமன்றத்தில் இருந்து தானே சட்டையைக் கிழித்துக் கொண்டு தெருவிற்கு வந்தவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கோவை : சட்டமன்றத்தில் இருந்து தானே சட்டையைக் கிழித்துக் கொண்டு தெருவிற்கு வந்தவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.தியாகராஜனை ஆதரித்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் பேசியதாவது :- இது மத்தியில் நிலையான அரசாங்கம், நாட்டிற்கு வலிமையான பிரதமர் தேவை என்பதற்காக நடைபெறும் தேர்தல் இது. இதற்கு நாம் மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வாக்களிக்க வேண்டும்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவது 2ஜி ஸ்பெக்ட்ரம் ராசா. இவர் மத்திய அமைச்சராக பதவி வகித்த போது, ஊழலில் சிக்கி திகார் சிறை சென்றவர். அவருடன் கனிமொழியும் சிறைக்கு சென்றார். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர் ஸ்பெக்ட்ரம் ராசா. இவர்கள் எதிர்க்கட்சி இருந்த போது சிறைக்கு செல்லவில்லை. மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் தி.மு.க.வும் ஆட்சியில் இருந்த போது, ஊழலில் சிக்கி சிறைக்கு சென்றனர். ஜெயலலிதா மறைந்தவுடன் அ.தி.மு.க.வையும், இந்த ஆட்சியையும் அழித்து விடலாம் என மு.க ஸ்டாலின் நினைத்தார். இந்த ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செய்த அராஜகம் கொஞ்ச நஞ்சமல்ல.

சட்டமன்ற பெஞ்சுகள் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நடனம் ஆடினர். ஆனால், தீர்மானத்தில் நாங்கள் வென்றவுடன் மு.க. ஸ்டாலின் தனது சட்டையை தானே கிழித்துக்கொண்டு சட்டமன்றத்தை விட்டு வெளியே தெருவிற்கு வந்தார். ஒரு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருக்கு இது அழகா..!. நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க தான். தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை சட்டமன்ற தேர்தலுக்கு வெளியிட்டது போல் உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்த போது, இவற்றையெல்லாம் மக்களுக்கு செய்தோம் என தி.மு.க.வால் பரப்புரை செய்ய முடியவில்லை. ஏனெனில், அவர்கள் ஆட்சிப்பொறுப்பில் இருந்த போது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், நாங்கள் மக்களுக்கு செய்த நன்மைகளை பட்டியலிட்டு வாக்கு கேட்கிறோம், என்றார்.
முதலமைச்சரின் இப்பிரச்சார நிகழ்ச்சியில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.