கோவை : நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி நாளை கோவை வருவதையொட்டி, சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் என 2,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோவை : நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி நாளை கோவை வருவதையொட்டி, சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் என 2,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கொடிசியாவில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக, இவர் நாளை மாலை தனி விமானம் மூலம் 6.30 மணியளவில் கோவை விமான நிலையம் வருகிறார். இதையடுத்து, விமானநிலையத்தில் இருந்து கொடிசியா செல்லும் அவர், 6.45-க்கு பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். பின்னர், இரவு 08.15 மணிக்கு தனி விமானம் மூலம் கோவையில் இருந்து டெல்லி செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் கோவை வந்தனர். இவர்கள் விமானநிலையம், பொதுக்கூட்டம் நடக்க உள்ள கொடிசியா மைதானம் என அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர்.
அதேபோல, தமிழக காவல்துறை சார்பில் பிரதமர் பாதுகாப்பு பணிக்காக சிறப்பு டி.ஜி.பி., ஐ.ஜி., 2 டி.ஐ.ஜி., 4 ஏ.டி.எஸ்.பி., 5 எஸ்.பி., 10 டி.எஸ்.பி., மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் மாநகர போலீசார் 1,000 பேர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்த போலீசார் 1,000 பேர் என மொத்தம் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.