கோவை : செல்போன் டார்ச் அடித்து பொதுமக்கள் வரவேற்பு அளித்த நிகழ்வின் மூலம், மக்கள் நீதி மய்யம் மாநிலத்தின் மூலை முடுக்குகள் வரை சென்றடைந்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கோவை : செல்போன் டார்ச் அடித்து பொதுமக்கள் வரவேற்பு அளித்த நிகழ்வின் மூலம், மக்கள் நீதி மய்யம் மாநிலத்தின் மூலை முடுக்குகள் வரை சென்றடைந்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஆர். மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழகத்தின் முதல் மாவட்டமாக கோவை திகழ வேண்டுமானால், மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச் விளக்கிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, காமராஜபுரம் அருகே பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் செல்போனில் உள்ள டார்ச்சை அடித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களின் ஏகோபித்த ஆதரவால் மகிழ்ச்சியடைந்த கமல், புதிதாக தொடங்கப்பட்ட கட்சி மக்களிடம் சென்றடைய 5 ஆண்டுகளாகும், அதேபோல, கட்சியின் சின்னம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது தேவைப்படும் என்றும், ஆனால், இங்கு கூடியிருக்கும் மக்களின் மூலம், டார்ச் லைட் மாநிலத்தின் மூலை முடுக்குகள் வரை சென்றடைந்திருப்பது தெரிவதாக பெருமிதம் கூறினார்.
மேலும், அவர் பேசியதாவது :- மக்களுக்கு சேவை செய்வதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டன. இதற்கு, மக்கள் தங்கள் வாக்குகளால், தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். இந்த முறை மக்கள் மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும். சிறந்த கல்வி, குடிநீர் வசதி, நவீன பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட வசதிகள் நிச்சயமாக செய்து தரப்படும். கோவையின் வேட்பாளர் மகேந்திரனுக்கு அரசியல் ஒரு தொழில் அல்ல. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார்.
எந்த பாகுபாடும் இன்றியும் திறமைமிக்கவர்களே மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். எனது குடும்பத்தினர்களை கட்சியின் தலைவர் போன்ற பதவிகளை வகிக்க அனுமதிக்க மாட்டேன். ஆனால், அவர்கள் கட்சியின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். வெறும் 30 நாட்களிலே மக்களின் மனதில் நமது கட்சியின் சின்னம் பதிந்துவிட்டது. அரசியல் மாற்றத்திற்கு வரும் 18-ம் தேதி நடக்கும் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிக்க வேண்டும், என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார்.