நீலகிரி : பிரச்சாரத்திற்காக உதகை நோக்கி சென்று கொண்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கான்வாயில் இடம்பெற்றிருந்த ஒரு வாகனத்தில், உரிய ஆவணமில்லாத ரூ. 17 லட்சம் ரொக்கத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி : பிரச்சாரத்திற்காக உதகை நோக்கி சென்று கொண்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கான்வாயில் இடம்பெற்றிருந்த ஒரு வாகனத்தில், உரிய ஆவணமில்லாத ரூ. 17 லட்சம் ரொக்கத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பிரச்சாரம் முடித்து விட்டு, உதகைக்கு பிரச்சாரம் மேற்கொள்ள சென்று கொண்டிருந்தார்.
அப்போது, முதலமைச்சரின் கான்வாயில் வந்த தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முதலமைச்சரின் கான்வாயில் இடம்பெற்றிருந்த வாகனத்தை எல்லநள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அதில், அந்த வாகனத்தில் போதிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 17 லட்சத்து 11 ஆயிரத்து 853 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து உதகை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு தேர்தல் அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
இது குறித்து நடத்திய விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் எல்லநள்ளி பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமானது என்பதும், வங்கிக் கணக்கில் செலுத்த எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் கான்வாயில் இடம்பெற்ற வாகனத்தை சோதனை செய்து தேர்தல் பறக்கும் படையினர் ரொக்கத்தை பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.