நீலகிரி : பாசிச ஆட்சியை ஆதரிக்கும் தமிழக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என நீலகிரியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா பரப்புரை மேற்கொண்டார்.
நீலகிரி : பாசிச ஆட்சியை ஆதரிக்கும் தமிழக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என நீலகிரியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா பரப்புரை மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் கூறும்போது, மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி வந்தால் தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு அதிபர் ஆட்சி வந்துவிடும். மேலும், அரசியல் சட்டத்திற்கு ஆபத்து வந்து உள்ளது. பாசிச ஆட்சியை ஆதரிக்கும் தமிழக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். நீலகிரியில் இயங்கி வந்த இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடியது போல், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அருமவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை காப்பாற்றப்படும், எனக் கூறினார்.

முன்னதாக, அவருக்கு படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, குன்னூரில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாகனத்தில் அவர் பரப்புரையை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து குன்னூரில் ஜி.ராமகிருஷ்ணன் பேசும் போது, மத்தியில் மதசார்பற்ற கூட்டணியை அமைக்க வேண்டும். நாட்டில் ஜனநாயக ஆட்சிக்கு பதில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. மேலும், மத்தியில் ஆண்ட ஆட்சி மக்கள் நலனில் அக்கரை கொள்ளாமல் கார்பரேட் நலனில் அக்கறை கொள்கிறது. நாட்டில் ஜனநாயகம் செழிக்க மதசார்பற்ற கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும், என்று அவர் கேட்டுக் கொண்டார்.