கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ராட்சத பலூனை ஆட்சியர் கு. ராசாமணி பறக்கவிட்டார்.
கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ராட்சத பலூனை ஆட்சியர் கு. ராசாமணி பறக்கவிட்டார்.

வரும் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வாக்காளர் விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்கவிட்டார். இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மேலாண் இயக்குநர் ஆர். சிவக்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர். மேலும், சமையல் எரிவாயு உருளையுடன் 100 சதவீத வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் பணியினையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, வடகோவை சிந்தாமணி கூட்டுறவு அங்காடி வளாகத்தில் ரோபோக்கள் மூலம் 100 சதவீத வாக்காளர் விழிப்புணர்வை பிரச்சாரத்தையும் அவர் ஆரம்பித்து வைத்தார்.

இதேபோல, கோவை மத்திய ரயில்நிலையம் வந்தடைந்த கன்னியாகுமரி விரைவு ரயிலின் பயணிகளுக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தும் விளம்பரப் பதாகைகளைக் கொண்டு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி துணை ஆணையருமான பிரசன்னா ராமசாமி தொடங்கி வைத்தார். மத்திய மண்டல உதவி ஆணையர் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.ஜே. செந்தில் அரசன், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ம. செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.