கோவை : பார்சன் அடுக்குமாடி குடியிருப்பு ஆக்கிரமிப்பு பகுதிகள் பறிமுதல் செய்யப்படும் என கோவை மாநகராட்சி உறுதி அளித்துள்ள நிலையில், 2 ஆண்டுகளாகியும் ஆக்கிரமிப்பு பகுதிகள் இன்னும் மீட்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : பார்சன் அடுக்குமாடி குடியிருப்பு ஆக்கிரமிப்பு பகுதிகள் பறிமுதல் செய்யப்படும் என கோவை மாநகராட்சி உறுதி அளித்துள்ள நிலையில், 2 ஆண்டுகளாகியும் ஆக்கிரமிப்பு பகுதிகள் இன்னும் மீட்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் அமைந்துள்ள 'பார்சன் அடுக்குமாடி குடியிருப்பு' வளாகத்தில், பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஜெனரேட்டர் அறை, ஏ.டி.எம் மையம் மற்றும் மோட்டர்பம்ப் அறை உள்ளிட்ட கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பூங்கா மற்றும் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படும் திறந்தவெளி இடத்தில் எந்தவித கட்டுமானங்களும் எழுப்பக் கூடாது என்ற விதிகளை மீறி கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்ததையடுத்து, கட்டுமானங்களை இடிக்குமாறு பார்சன் குடியிருப்பு நல சங்கங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கடந்த 2017-ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பார்சன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் விவகாரம் குறித்து பார்சன் அடுக்குமாடி குடியிருப்புவாசி கனகசுந்தரம் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்தார். ஆனால், மாநகராட்சி ஆணையரிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஆணையரின் கவனத்திற்கு இதனை எடுத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் ஆர்.டி.ஐ. ஆணையர் நடத்திய விசாரணையையடுத்து, கனகசுந்தரத்தின் மனு குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், பார்சன் அடுக்குமாடி குடியிருப்பு ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இது குறித்து கனகசுந்தரம் கூறியதாவது :- கடந்த மாதம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது ஆஜரான கிழக்கு மண்டல துணை ஆணையர், நகர திட்ட அலுவலருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்தப் பணிகள் முடிக்கப்படாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பணியினை செய்யத் தவறியதாக வழக்கு தொடர உள்ளேன்.
தற்போது 60 அடி சாலை விதிகளுக்கு மாறாக சுருங்கி 33 அடிதான் உள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை மீட்டு, சாலை அமைக்கும்பட்சத்தில் ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் இன்றி பொதுமக்கள் பயணிப்பார்கள். இந்த சாலையானது, ராமநாதபுரம் சிக்னலை சந்திக்காமல், எளிதில் உக்கடம் சென்றடைய முடிகிறது. ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆக்கிரமிப்பு பகுதிகளை விட்டுக் கொடுக்க குடியிருப்பு சங்கம் முன்வரவில்லை. ஏனெனில், ஆக்கிரமிப்பு பகுதியை விட்டுக் கொடுத்தால், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் மதிப்பு குறைந்து விடும் என்ற அச்சமே காரணம், என்றார்.
மேலும், சாலை அமைப்பதற்கு கிட்டத்தட்ட 20 ஒப்புதல் கடிதங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நான் நீதிமன்றத்தை நாடினால், அந்த ஒப்புதல் கடிதங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஆனால், இதுவரை அவற்றை நான் பெறவில்லை. ஏற்கனவே, ஆர்.டி.ஐ. ஆணையர் சாலை அமைப்பதற்கான ஒப்புதல் கடிதங்களை என்னிடம் சமர்பிக்க மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தியிருந்தார். அப்போது, 8 ஒப்புதல் கடிதங்களை தருவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், 90 நாட்களாகியும் எனக்கு அளிக்கவில்லை. இறுதியில் அவர்களிடம் இருந்து ஒன்று மட்டுமே பெற்றுக் கொண்டேன். இதனிடையே, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 15 ஆண்டுகளில் எந்தவிதமான ஒப்புதல் நகல்களும் அளிக்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒருவேளை 20 ஒப்புதல் கடிதங்கள் அனுமதித்திருந்தால், அதனை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும், என்றார்.
இது குறித்து பார்சன் அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தைச் சேர்ந்த சுவாமிநாதனிடம் கேட்ட போது, "ஆர்.டி.ஐ. அலுவலரிடம் இருந்து ஏதேனும் உத்தரவு வந்தால், அதற்கேற்றவாறு முடிவு செய்வோம்," என்றார்.
இதனிடையே, கிழக்கு மண்டலத்தின் தற்போதைய மாநகராட்சி துணை ஆணையர், பார்சன் விவகாரத்தில் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என உறுதியளித்தார்.