கோவை : கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 149 கிலோ தங்க கட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 149 கிலோ தங்க கட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிங்ஸ் என்னும் தனியார் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகள் உள்ளது. மேலும், இந்த நிறுவனமானது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தங்க நகை உற்பத்தியாளர்கள் அவர்களது பெட்டகத்தில் பாதுகாப்பாக இருக்க வைத்திருப்பர். இந்த நிலையில், சவுரிபாளையம் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் கிளையிலிருந்து டவுன்ஹால் பகுதியில் உள்ள ஏழு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 149 கிலோ எடையிலான தங்க கட்டிகளுடன், அந்நிறுவனத்தின் டெம்போ வேன் ஒன்று டவுன்ஹால் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, புலியகுளம் பகுதியில் அந்த வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், வாகனத்தின் உள்ளே தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அதற்கான உரிய ஆவணங்களை வாகனத்தில் வந்தவர்கள் சமர்ப்பிக்காததையடுத்து, தங்க கட்டிகளுடன் வாகனத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதனிடையே, தங்கநகை உற்பத்திக்காகக் கொண்டு செல்லப்பட்ட நகையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததை அறிந்த, 25க்கும் மேற்பட்ட தங்கநகை உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்க நகையை மீட்டுக் கொள்ளலாம் என கூறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர், வருமானவரித்துறை அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.