நீலகிரி : கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சந்தைகளில் உள்ள காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நீலகிரி : கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சந்தைகளில் உள்ள காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது. கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், மேரக்காய், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், சிலர் ஏற்றுமதி தரம் வாய்ந்த சல்லாரை, புரூக்கோ, ஒஸ்பெர்க், சுகுனி உள்ளிட்ட இங்கிலிஷ் காய்கறிகளை பயிரிட்டு, கணிசமான லாபத்தை ஈட்டுகின்றனர்.
கோத்தகிரியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பயிரிட்டுள்ள பயிர்களைக் காப்பாற்ற ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர்.
இந்த நிலையில், கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் கடந்த 2 வாரங்களாக உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக, உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ள பேரார், நெடுகுளா, கட்டபெட்டு, பனஹட்டி, பில்-பில்லிக்கம்பை, கக்குச்சி உள்ளிட்ட கிராம விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். கேரட்டுக்கு போதுமான கொள்முதல் விலை கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், தோட்டத்தில் மாற்றுப் பயிராக உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, உருளைக்கிழங்கு கொள்முதல் விலையும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சந்தைகளில் காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கிலோவுக்கு சராசரியாக ரூ. 23 முதல் ரூ. 26 வரை மட்டுமே தரத்துக்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்படுகிறது.
தற்போது இங்குள்ள தோட்டங்களில் உயர்தர விதைகளான கிரி ராஜா, குப்ரி ஜோதி, ஜலந்தர், பண்ணை கிழங்கு போன்ற விதைகளைப் பயன்படுத்தி, உருளைக்கிழங்கு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயிர் செய்து 3 மாதங்களில் உருளைக்கிழங்கு அறுவடைக்குத் தயாராகி விடும். நீலகிரி உருளைக்கிழங்கு சுவை மிகுந்ததாக இருப்பதால், சந்தையில் வரவேற்பு அதிகம் உள்ளது. எனவே, இனிவரும் மாதங்களில் நீலகிரியில் பயிரிடப்படும் உருளைக்கிழங்கிற்கு கணிசமான கொள்முதல் விலை கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.