கோவை : மக்களவை தேர்தலை முன்னிட்டு கோவை தொகுதியில் 148 பிரச்சார வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவை : மக்களவை தேர்தலை முன்னிட்டு கோவை தொகுதியில் 148 பிரச்சார வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. கோவை மக்களவை தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், அ.ம.மு.க. உள்பட 8 வேட்பாளர்கள் சுயேட்சைகள் ஆவர். கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சட்டமன்ற தொகுதியும் கோவை மக்களவை தொகுதிக்குள் வருகிறது.
இதனிடையே, வேட்பாளர்கள் மற்றும் கட்சி சார்பாக பிரச்சாரம் செய்யப்படும் வாகனங்களுக்கு முறையாக அனுமதி வாங்கப்பட வேண்டும். இதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒற்றைசாளர முறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், கோவை மக்களவை தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய 148 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "148 வாகனங்களுக்குக் கோவை மக்களவை தொகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி சான்றிதழை வாகனங்களின் முன் பகுதியில் அனைவருக்கும் தெரியும்படி ஒட்டி வைக்கப்பட வேண்டும். தேர்தல் அதிகாரிகளுக்கு சந்தேகம் இருப்பின் அனுமதி சான்றிதழை அவர் சோதனை செய்வார்கள். அனுமதி வாங்காமல் வாகனங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், தேர்தல் விதிமுறை மீறல்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.