கோவை : நாட்டில் உள்ள ஜனநாயகத்தை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.-ம் சீரழித்து வருவதாக ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் குற்றச்சாட்டியுள்ளார்.
கோவை : நாட்டில் உள்ள ஜனநாயகத்தை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.-ம் சீரழித்து வருவதாக ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் குற்றச்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- நமது நாட்டை பாதுகாக்கவும், சாதி அடிப்படையிலான ஆதிக்கத்தை முறியடிக்க நமக்கு புதிய சிந்தனைகளுடன் கூடிய அரசியல் தலைவர்கள் தேவைப்படுகின்றனர். இது நமது எதிர்கால இந்தியாவிற்கு முக்கியமானதாகும். தற்போது, புதிய சிந்தனைகள் மற்றும் கொள்கைகளைக் கொண்ட புதிய அரசியல் தலைவராக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தென்படுகிறார். எனவே, எதிர்வரும் தேர்தலில் அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். என்றார்.

மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை மற்றும் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், கமல்ஹாசனுடன் இணைந்து திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். சேலம் - கோவை இடையே 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தின் மூலம் சமூகத்திற்கு அடையாளம் காணப்பட்ட அவருக்கு, ஏராளமான விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, ஸ்வராஜ் இந்தியா பார்ட்டியின் மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில், "மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு அளிப்பதற்கு முக்கியக் காரணம், தொடக்கத்திலிருந்தே விவசாயிகளுக்காகக் குரல் கொடுப்பதால்தான்," என்றார்.
மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் ஆர். மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- மக்கள் நீதி மய்யத்துடன் ஸ்வராஜ் இந்தியா பார்ட்டி இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என யோகேந்திர யாதவ் புதிய அரசியல் தலைவர்களை தேடி வந்தார். இந்த சூழலில், எங்களது சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் அவரை கவர்ந்துள்ளது, என்றார்.
"மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். தமிழகத்தில் ஆரம்பத்தில் நல்ல கொள்கைகளுடன் திராவிடக் கட்சிகள் இருந்து வந்தன. ஆனால், தற்போது, முறையான கொள்கைகளும், திட்டங்களும் ஏதும் இல்லை," என்கிறார் யோகேந்திர யாதவ்.