கோவை : கோவை மக்களவை தொகுதியின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பி.ஆர். நடராஜனுக்கு ஆதரவு அளிப்பதாக கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் (கோப்மா) சஙத்தினர் அறிவித்துள்ளனர்.
கோவை : கோவை மக்களவை தொகுதியின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பி.ஆர். நடராஜனுக்கு ஆதரவு அளிப்பதாக கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் (கோப்மா) சஙத்தினர் அறிவித்துள்ளனர்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் சி.பி.எம். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் கோப்மா சங்க நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது:- கோவை மாவட்டத்தில் சுமார் 3,000 பம்ப் உற்பத்தி செய்யும் சிறு,குறு நிறுவனங்கள் உள்ளன. மேலும், 300 வார்ப்பட தொழிற்சாலைகளும், 200 கிரைண்டர் நிறுவனங்களும்,30,000 சிறு,குறு லேத் பட்டறைகளும் உள்ளன.
மத்திய அரசின் தவறான முடிவுகளால் இந்த நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் துவண்டு போயிருந்த நேரத்தில் ஜி.எஸ்.டி. வரியையும் புகுத்தியதால் பல்வேறு சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்த கோரிக்கையை எங்களிடம் முன்வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும், ஆட்சி மாற்றம் ஆன உடனே கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகவும், 18 சதவீதத்தில் இருக்கும் ஜி.எஸ்.டி-ஐ 5 சதவீதமாக குறைப்பதாகவும் உறுதி அளித்துள்ளோம்.
தேர்தல் நேரத்தில் கட்சியின் முடிவுகள் எல்லா மாநிலத்திலும் ஒரே மாதிரியாக இருப்பது சாத்தியமில்லை. எங்களுக்கு மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே இலக்கு. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது கோவையில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது ஜனநாயகத்திற்கு முரணான செயல். ஆளும் அரசை விமர்சிப்பது தேசதுரோக குற்றமாகாது, இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, கோப்மா தலைவர் மணிராஜ் கூறியதாவது:- பம்ப்செட்கள் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. குடிநீர் விநியோகத்திற்கும் இந்த பொருள் தேவை. இத்தகைய அத்தியாவசிய பொருளுக்கு இரட்டைவரி சுமத்தியிருக்கக் கூடாது. விற்பனைக்கு 18 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஜாப் ஒர்க் தொழிலுக்கும் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.க்கு முன் ஜாப் ஒர்க் தொழிலுக்கு வரியே இல்லை. இது கூலித்தொழில் வகையை சேர்ந்தது. இத்தகைய முரண்பாடான வரிவிதிப்பு கொள்கையால், பல சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டன. கோவையில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இந்த வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், ஜாப் ஒர்க்கிற்கு வரி விதிக்க கூடாது என்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் கோரிக்கை விடுத்தோம். ஆனால், எங்கள் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், மா.கம்யூ. கட்சிதான் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி கொடுத்துள்ளது. இந்த மக்களவை தேர்தலில் எங்கள் சங்கத்தினர் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த மா.கம்யூ. வேட்பாளர் பி.ஆர். நடராஜனுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்துள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.