கோவை: நாடாளுமன்ற தேர்தலில் 40-ம் லட்சியம்..40-ம் நிச்சயம் என கோவையில் நடைபெற்று வரும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை: நாடாளுமன்ற தேர்தலில் 40-ம் லட்சியம்..40-ம் நிச்சயம் என கோவையில் நடைபெற்று வரும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி நம்பிக்கை தெரிவித்தார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி பிரச்சாரப் பொதுக்கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி பேசியதாவது :- நேசத்தை விதைக்கும் ஆட்சியை அமைக்கவிருக்கும் மதச்சார்பற்ற கூட்டணி, மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேருவின் பாதையில் இருந்து கோட்ஸே பாதையில் செல்லும் ஆட்சியர்கள் தோல்வியை தழுவுவது உறுதி. ஸ்டாலின் தலைமையில் 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதி. அவதூறுகளையும், நெருக்கடியையும் மீறி வெற்றி உறுதி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானதும் மோடியின் தோல்வி உறுதியாகிவிட்டது.
அனைத்து சமூகத்தினருக்காகவும் கலைஞர் சமத்துவபுரம் உருவாக்கினார். அதேபோல், ஸ்டாலின் சமத்துவ கூட்டணியை உருவாக்கியுள்ளார். லெனின் சிலையை உடைத்தவர்கள், பெரியார் சிலையை உடைக்க நினைக்கும் துணிவை யார் தந்தது. இவர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டியது நமது கடைமை. அதனால் தான் என்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு அளித்துள்ளோம். கட்சியா..? நாடா..? என்றால், எனக்கு நாடு தான் முக்கியம். 40-ம் லட்சியம்..!. 40-ம் நிச்சயம், என்றார்.

இவரைத் தொடர்ந்து, ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் பேசியதாவது :- இந்த தேர்தல் என்பது, பாசிசத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கும் போர். இந்தத் தேர்தலில் ஜனநாயகம் தோற்றுப்போனால், அடுத்து தேர்தல் நடக்குமா..? என்பது கேள்விக்குறியாகி விடும். கடந்த ஆண்டுகளில் பாசிச சக்தி கரத்தை வலுப்படுத்தி வருகிறது. மோடியின் பின்னால் இருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்று சென்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு அனைத்து அதிகார அமைப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இவர்களை தட்டிகேட்கும் பகுத்தறிவாளர்களைச் சுட்டுக்கொள்கின்றனர். கடந்த தேர்தலில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து இவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மாதம் ரூ. 6,000 என ஆண்டுக்கு ரூ. 72,000 வழங்கும் வறுமை ஒழிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு நீட் விலக்கு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் சாலை பணியாளர்களாக பணியாற்றிய பட்டியல் இன மக்கள் வேலையை இழந்தனர். மீண்டும் அவர்களுக்காக ஒரு கோடி சாலை பணியாளர்கள் வேலை வழங்கப்படும் என ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். எனவே, 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி அடைய வேண்டும். கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும், எனக் கூறினார்.

தொடர்ந்து, உரையாற்றிய கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது :- வரும் தேர்தல் மோடியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் என்பது அனைவருக்கும் தெரியும். வரும் தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்றால், மத்தியில் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, தமிழகத்தின் கோட்டையில் ஸ்டாலினை முதல்வராக்கும் தேர்தலும் இது. மத்திய பிரதமராக ராகுல் பதவி ஏற்கும் போது, ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பங்குபெற வேண்டும். நதிகள் இணைப்பு, வேலை வாய்ப்பு உருவாக்குதல், ஸ்மார்ட் சிட்டி என சொன்னார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. குஜராத் மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றினார்கள். இளைஞர்களுக்கு வேலை இல்லை, பெண்களுக்கு இங்கே பாதுகாப்பில்லை, இதுதான் குஜராத் மாடலா..?.
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி எதற்கு..? அ.தி.மு.க.வின் பத்து பேர் ஊழல் வழக்கில் இருந்து தப்புவதற்காகத் தான் அ.தி.மு.க.,வினர், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளனர். இதற்காக தமிழக உரிமையை இழக்க முடியுமா..?. கூட்டணியை பொறுக்குமா ஜெயலலிதாவின் ஆவி..?. வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா சமாதிக்கு ஏன் அழைத்து செல்லவில்லை. கொங்கு மண்டலத்தின் மக்கள் பொள்ளாச்சி சம்பவத்தை மறக்கமுடியுமா..?. எனவே, இவர்களை ஆட்சியிலிருந்து அகற்றியாக வேண்டும். இதற்காக, கொ.ம.தே.க.வினர் அயராது பணியாற்றி பி.ஆர். நடராஜனை வெற்றிபெற வைப்போம் என உறுதியளிக்கிறேன், என்றார்.