கோவை : கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சி.பி.எம். தமிழக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கோவை : கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சி.பி.எம். தமிழக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி பிரச்சார பொதுகூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சி.பி.எம். தமிழக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கொ.ம.தே.க. பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஆதிதமிழர் பேரவை தலைவர் இரா.அதியமான், சி.பி.ஐ. தமிழக மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாகிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மைதீன், மனித நேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி, இந்திய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளர் லீமா ரோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வரவேற்புரை ஆற்றினார்.

இதைத் தொடர்ந்து, முதலாவதாக சி.பி.எம். தமிழக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது :- இங்கு கூடியுள்ள கூட்டம் வெற்றி விழா கூட்டம் என கருதுகின்ற அளவிற்கு கூடியுள்ளது. இதன் மூலம், வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றியை உறுதி செய்துள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமியை அப்புறப்படுத்தும் சூழல் உருவாகி கொண்டு இருக்கின்றது.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்பதால், மோடி நடுங்கி கொண்டு இருக்கிறார். இந்த வெற்றிக்கு தடை விதிக்க முடியாத காரணத்தால், தி.மு.க. தலைவர்களின் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்துகின்றனர். இதன் மூலம், தேர்தல் பணிகளை முடக்கிவிடலாம் என நினைக்கின்றனர். வருமானவரி துறையினர் சோதனை செய்வதற்கு தி.மு.க. வினர் வீடுகள் மட்டும்தான் கிடைத்ததா..?. ஏன் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை நடத்தாமல் உள்ளனர். அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழக முதலமைச்சர் எடப்பாடியின் எடுபிடிகள் வீட்டிலும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வீட்டில் சோதனை நடத்த தயாரா..?. மேலும், மோடி, எடப்பாடி ஆகியோர் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், வரும் மே மாதம் 23-ம் தேதி, இதே வருமான வரித்துறை உங்களின் வீடுகளிலும் நுழையும். மேலும், புழல் சிறை தயாராகவே இருக்கிறது.
மேலும், வரும் ஏப்ரல் 18 எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்ட பொதுமக்கள் தயாராகி விட்டனர். மோடி அலை வீசுவதாக கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் மோடிக்கு எதிரான அலை நாடு முழுவதும் வீசி வருகிறது. மோடிக்கு ஆதரவு அலை என மக்கள் காதில் பூ சுற்ற அ.தி.மு.க.,வினர் முயல்கின்றனர். மோடியோடு யாராவது ஒருவர் புதிதாக கூட்டணி சேர்ந்து இருக்கின்றனரா..?. மோடியை விட்டு வெளியேறி இருக்கின்றனரே தவிர, புதிதாக தமிழகத்தை தவிர வேறு எங்கும் மோடியுடன் யாரும் கூட்டணி வைக்கவில்லை. மோடி அரசு முழ்குகின்ற கப்பல்.
தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. உட்பட அனைத்து கட்சிகளும், 4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த கேட்டு இருக்கின்றோம். ஆனால், 4 தொகுதி இடைதேர்தல் நடத்த கேட்க எடப்பாடிக்கு தைரியம் இருக்கின்றதா..?. தேர்தல் நடத்தப்பட்டால், டெபாசிட் கூட கிடைக்காது என எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என்பதால் தான், மீதமுள்ள தொகுதிகளில் கேட்க மறுக்கிறார். எதிர்கட்சியைச் சேர்ந்த கோவை வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15 லட்ச ரூபாய் வரவு வைக்கப்படும் என கூறினார். அந்த 15 லட்சம் ரூபாய் எங்கே..?. மோடி அனைவருக்கும் வழங்குவதாக சொன்ன பணம் எங்கே எனக் கேட்டால் எதிர்கட்சி வேட்பாளர் என்ன செய்வார், என கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.