கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்காக கொண்டுவரப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னம் கண்ணுக்கு தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.
கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்காக கொண்டுவரப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னம் கண்ணுக்கு தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.
கோவை நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கல்யாணசுந்தரம் மாவட்ட ஆட்சியரும், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராசாமணியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னம் கண்ணுக்கு தெரியவில்லை எனவும், அதனை தெளிவாக தெரியும்படி சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம் கூறியதாவது :- தேசிய கட்சிகளை எதிர்த்து தங்கள் கட்சி போட்டியிடுகிறது. கோவை மக்களின் நீண்டகால தேவைகளை இதுவரை பூர்த்தி செய்யாத, ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து தேவைகளை நிறைவேற்றாதவர்களை எதிர்த்து போட்டியிடுகிறேன். இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் தங்களது வேட்பாளருக்கு ஒரு ஸ்லிப் வழங்கப்பட்டது. அதில், வாக்கு எந்திரத்தில் தேர்தலில் போட்டியிடுபவரின் பெயர் சின்னங்கள் எப்படி இருக்கும் என்பது மாதிரி வழங்கப்பட்டது. மற்ற சின்னங்கள் தெளிவாக உள்ள நிலையில், விவசாயி சின்னம் கண்ணுக்கே தெரியவில்லை.
இதேநிலை, தமிழ்நாடு முழுவதும் இருக்கும்பட்சத்தில் தங்களை தோற்கடிக்கும் விதமாக இருக்கிறது. சின்னம் தெளிவாக இருக்கும் வகையில் சரிசெய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். இதுவரை வாக்கு இயந்திரங்களில் பதிய வேண்டியவை வந்து சேரவில்லை. கட்டாயம் இது சரி செய்யப்படும் என தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார். சின்னம் சரிசெய்யப்படாவிட்டால் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம், என தெரிவித்தார்.