கோவை : பொய் வாக்குறுதியை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த மோடியின் மோசடித்தனத்திற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என கோவையில் பிரச்சாரத்தின் போது சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை : பொய் வாக்குறுதியை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த மோடியின் மோசடித்தனத்திற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என கோவையில் பிரச்சாரத்தின் போது சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
17-வது மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, தி.மு.க. கூட்டணியில் கோவை மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர். நடராஜன் போட்டியிடுகிறார். இவர் இன்று தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை சிவானந்த காலனி அருகே உள்ள ஹோசிமின் நகரில் தொடங்கிய வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயணம், சிவானந்தகாலனி, வள்ளுவர் வீதி, காந்திபுரம் பகுதிகள், சக்திரோடு, 100 அடி சாலை, நஞ்சப்பாசாலை, வி.கே.கே. மேனன் ரோடு, சித்தாபுதூர், திருச்சி சாலை, நஞ்சுண்டாபுரம் சாலை, பங்கஜமில் சாலை, சௌரிபாளையம் சாலை, கணேசபுரம், புலியகுளம் ஆகிய தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.
இதில், தி.மு.க., நாச்சிமுத்து, சேதுராமன், வே.நா.உதயகுமார், நந்தகுமார், ராஜேஸ்வரி, காங்கிரஸ் சி.வி.சி. குருசாமி, ராமநாகராஜ், வீனஸ்மணி, ம.தி.மு.க. ஆர்.ஆர்.மோகன்குமார், சேதுபதி, லூயிஸ், சற்குணம், போ.சு.முருகேசன், விடுதலை சிறுத்தைகள் ஜோ.இலக்கியன், சிபிஐ வி.எஸ்.சுந்தரம், ரவீந்திரன், ஜெயா, ஆர்.பாலகிருஷ்ணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தங்கராசு, இ.ஈஸ்வரன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சி.பி.எம். எஸ்.கிருஷ்ணமூர்த்தி, யு. கே.சிவஞானம், என்.ஜாகீர், ஆர்.சுரேஷ் உள்ளிட்ட மனிதநேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி, ஐ.ஜே.கே., தி.க., தி.வி.க., த.பெ.தி.க., ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி, விவசாயிகளின் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள், அமைப்பின் நிர்வாகிகள் தலைமையேற்று வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, வாக்கு சேகரிப்பு பிரச்சார பயணத்தில் சி.பி.எம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேசியதாவது :- கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட மோடி பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். குறிப்பாக, ஒவ்வொருத்தரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன், ஆண்டுக்கு இரண்டு கோடிப்பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உற்பத்தியாகும் பொருட்களின் ஏற்றுமதிக்கு வழிசெய்வேன் உள்ளிட்ட வாக்குறுதிகளை தந்தார்.
இந்த பொய்யான வாக்குறுதியளித்து ஆட்சி அதிகாரத்தை மோடியின் பா.ஜ.க. கைப்பற்றியது. ஆனால், சொன்னது எதுவும் நிறைவேற்றாதது மட்டுமல்ல. லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை அளித்து வந்த இந்த கொங்கு மாவட்டங்களின் சிறுகுறு தொழில்கள், பின்னலாடை, ஜவுளி என அனைத்து தொழில்களையும் சீரழித்து உள்ளார். இதனால், தொழில் முனைவோரும், தொழிலாளர்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். கருப்பு பணத்தை கைப்பற்றி பொதுமக்களின் வங்கிக்கணக்கில் பணம் போடுவதாய் சொன்னவர், செல்லாத நோட்டு அறிவிப்பு கொடுத்து கார்ப்ரேட்டுகளின் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கியதோடு, சொந்த பணத்தை வைத்திருந்த அப்பாவி மக்கள், அதனை மாற்ற வங்கி, ஏ.டி.எம். வாசலில் நிற்கவைத்து வேதனையுடைய செய்தவர் மோடி.
பொய் வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றிய மோடியின் மோசடித்தனத்திற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். அதேசமயம், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மாணவர்கள் கல்விக்காக வாங்கிய வங்கிக் கடன்களை ரத்து செய்யப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல, ராகுல்காந்தி ஏழை குடும்பத்தினருக்கு ஆண்டிற்கு 72 ஆயிரம் கோடி ரூபாய் உத்தரவாதம் செய்யப்படும் என்று அறிவிக்கை செய்துள்ளார். இங்கே நாங்கள் முன்வைக்கிற வாக்குறுதிகள் நிறைவேற்ற சாத்தியமானது என்பதற்கான ஆதாரங்களை எடுத்து வைத்திருக்கிறோம். பொய்யை சொல்லி அதிகாரத்தைப் பிடித்த மோடி வகையறாக்களை விரட்டியடிப்போம். மக்கள் நலனை முன்னிறுத்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அரசிற்கு வாக்களியுங்கள், என்றார்.
முன்னதாக, தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயணத்தில் நூற்றுக்கணக்கான கூட்டணி கட்சிகளின் ஊழியர்கள் பங்கேற்றனர்.