கோவை : மக்களின் ஆதரவு அலையால் சுனாமியாக மாறி தி.மு.க. கடலில் தள்ளப்பட்டதாகவும், கடலில் மூழ்கிய தி.மு.க.,வால் இன்று வரை மீண்டு வர முடியவில்லை என கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
கோவை : மக்களின் ஆதரவு அலையால் சுனாமியாக மாறி தி.மு.க. கடலில் தள்ளப்பட்டதாகவும், கடலில் மூழ்கிய தி.மு.க.,வால் இன்று வரை மீண்டு வர முடியவில்லை என கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று ஒலம்பஸ் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக, பிரச்சாரத்திற்காக வருகை புரிந்த அவருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பின்னர், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது :- பா.ஜ.க.வின் வெற்றி வேட்பாளராக சி.பி.ஆர். நிறுத்தப்பட்டு உள்ளார். இந்தப் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை மத்திய, மாநில அரசின் நிதியுதவியோடு, திட்டங்கள் மூலம் சிறப்பாக செயல்படுத்த யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை எஜமானர்களாக இருந்து வாக்களிக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். கடந்த காலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்து உள்ளன. இதில், யார் ஆட்சியில் மக்களின் ஜீவாதார பிரச்சனைகளுக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது என பார்த்து வாக்களிக்க வேண்டும்.

2011-2016 வரை ஐந்து ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட தி.மு.க. ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு, மின்சார தட்டுப்பாட்டைத் தீர்க்க முடியவில்லை. அப்போதைய மின்சார துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராச்சாமி, இந்த ஆட்சி தொலையும் என்றால் அது மின்சாரத்தால்தான், என்றார். அவரது வாக்கு பலித்துவிட்டது. அந்த நேரத்தில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு கிடந்ததால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர். மக்கள் ஆதரவலையால் சுனாமியாக மாறி தி.மு.க. கடலில் தள்ளப்பட்டது. கடலில் மூழ்கிய தி.மு.க.,வால் அதிலிருந்து இன்று வரை மீள முடியவில்லை.
2014-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது பெரும் கட்சியாக உருவாக்கி வரலாற்றை உருவாக்கியவர் ஜெயலலிதா. மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களை செயல்படுத்தியவர். 10 ஆண்டு காலமாக தி.மு.க., காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்ததில் 9 பேர் மத்திய அமைச்சராக இருந்தும், எந்த ஒரு உருப்படியான திட்டமும் தமிழகத்திற்குக் கிடைக்கப் பெறவில்லை. சேது திட்டத்தை அறிமுகம் செய்து டி.ஆர். பாலுவின் பிடிவாதம் காரணமாக, 40 ஆயிரம் கோடி ரூபாயை கடலில் போட்டு பணம் வீணடிக்கப்பட்டது.
காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் மூலம் சட்டப் போராட்டம் நடத்தி அரசாணை அ.தி.மு.க. அரசால் பெறப்பட்டது. தொலைநோக்கு திட்டங்களைக் கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
குடிசை பகுதிகளில் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தற்போதைய முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றனர். சிறுபான்மையினரின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. கட்சி விளங்குகிறது. வலிமையான பாரதம் உருவாக வேண்டும் என பாரத பிரதமர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இருந்த தடைகளை நீக்கி, அது நடைபெற உதவியாக இருந்தார். எய்மஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு நிதி அளித்து உதவி வருகிறது. நல்லவர் ஒரு புறமும், அதர்மகாரர்கள் ஒரு புறமும் இந்த தேர்தலில் உள்ளனர்.
மாநிலத்திற்கு மாநிலத்தில் வேறுபாடு, மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபாடு என கொள்கை கொண்ட கூட்டணியாக எதிர்கட்சி கூட்டணி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அ.தி.மு.க., காணாமல் போகும் என ஸ்டாலின் கூறுவது வேடிக்கையானது. ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இந்த இயக்கத்தை யாராலும் அழிக்கவும் முடியாது, அசைக்கவும் முடியாது.
வன்முறை கலாச்சாரத்தை ஆளும் கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்கட்சியாக இருக்கும் போது சரி, தி.மு.க. செயல்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. ஆட்சியைப் பிடிக்க என்னென்னவோ செய்தும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.
கோவை நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷணனுக்கு பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார். இந்த பிரச்சாரத்தின் போது, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உடனிருந்தார்.