கோவை : பரோடா, தேனா மற்றும் விஜயா வங்கிகளின் இணைப்பால், நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி உருவாகியுள்ளதாக பரோடா வங்கி மண்டல மேலாளர் தோமச்சன் தெரிவித்துள்ளார்.
கோவை : பரோடா, தேனா மற்றும் விஜயா வங்கிகளின் இணைப்பால், நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி உருவாகியுள்ளதாக பரோடா வங்கி மண்டல மேலாளர் தோமச்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு வங்கிகள் இணைப்பது குறித்து இயக்குனர் குழு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியான அறிவிப்பின்படி, நேற்று முதல் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி, பரோடா வங்கியின் கிளைகளாக செயல்பட துவங்கி உள்ளது. இது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று ரயில்நிலையம் எதிரில் உள்ள பரோடா வங்கி அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.
அப்போது, பரோடா வங்கி மண்டல மேலாளர் தோமச்சன் கூறியதாவது :- இந்த வங்கிகள் இணைப்பு மூலம் 9,500 மேற்பட்ட கிளைகள், 13,400 ஏ.டி.எம். மையங்கள், 85,000 ஊழியர்கள், 120 மில்லியன் வாடிக்கையாளர்கள், 15 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகத்துடன் நாட்டின் இரண்டாவது பெரிய பொதுதுறை வங்கியாக உருவெடுத்து உள்ளது. மேலும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு நாணய நிதி இணைக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்க பெறுவதுடன், உயர்தர வங்கி சேவைகள் பெறுவார்கள்.
வரும் 2019-ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து வங்கிகளிலும் உள்ள வாடிக்கையாளர் கணக்குகள் ஒற்றை மைய வங்கி அமைப்பிற்கு மாறும். 18 மாத காலத்திற்குள் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு நிறைவு பெறும். மேலும், வங்கி ஊழியர்களின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். வங்கிகளால் பின்பற்றப்படும் மனிதவள மேம்பாடு மூலம் சிறப்பாக செயல்படுத்தப்படும். கோவை மாவட்டத்தில் 13 விஜயா வங்கிகள், 11 பாங்க் ஆப் பரோடா வங்கிகள், 2 தேனா வங்கிகள் என மொத்தம் 26 வங்கிகளும் இனிவரும் காலங்களில் ஒருங்கிணைந்து செயல்படும், என்றார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது விஜயா வங்கி மண்டல மேலாளர் ரவிசந்திரன், பரோடா வங்கி டி.ஆர்.எம் ரவி, ஒப்பணக்கார வீதி கிளை வங்கி மேலாளர் அமல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.