கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனை தமிழக அரசு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜனை தமிழக அரசு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் சாமளாபுரம் டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய பெண்ணை கண்ணத்தில் அறைந்து மிகப்பெரிய சர்ச்சைக்குள் சிக்கியவர் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன். ஆனாலும், அடுத்தடுத்த பதவி உயர்வுகள் அவரைத் தேடி வந்தன. பின்னர், கடந்த ஆண்டு கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி.யாக பாண்டியராஜன் நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வழக்கு, துடியலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை என்று அடுத்தடுத்து குற்றங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
குறிப்பாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்கு பாண்டியராஜனுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மேலும், அவர் அ.தி.மு.க அரசுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில், பாண்டியராஜனை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பாண்டியராஜன் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார், கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பொள்ளாச்சி டி.எஸ்.பிஜெயராமன் மாற்றப்பட்டு, ஊட்டி க்ரைம் பிரேன்ச் ரெக்கார்ட் டி.எஸ்.பி சிவக்குமார் பொள்ளாச்சி டி.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் நடேசன் மாற்றப்பட்டு, கோவை நக்சல் சிறப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடராமன், கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.