கோவை : கோடை வறட்சியின் காரணமாக கோவையில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவியின் நீர் இருப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
கோவை : கோடை வறட்சியின் காரணமாக கோவையில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவியின் நீர் இருப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
கோடை கால வறட்சியின் காரணமாக கடந்த 26-ம் தேதி முதல் கோவை குற்றாலத்தில் இயற்கை சுற்றுலாவிற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

தண்ணீர் இன்றி வறட்டியாக சூழல் நிலவுவதால், கோவை குற்றாலம் அருவி, மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக கோவை மாவட்ட அலுவலர் டி.வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். மேலும், இந்தப்பகுதியில் இருக்கும் ஒரே நீர் ஆதாரம் கோவை குற்றாலம் அருவிதான் என்பதால், இந்த சமயங்களில் நீரைத் தேடி வரும் காட்டு யானைகளின் நடமாட்டமும் அதிகரித்து இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இங்கு வசித்து வரும் மலைக்கிராம மக்கள் மட்டுமே அருவியை குளிப்பற்கு மற்றும் இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், கோவை குற்றாலம் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், எந்தநேரமும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகவும் இயற்கை சுற்றுலா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையறியாமல் வரும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதனிடையே, வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்கும் வகையிலான வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு வன ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.