கோவை : கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு, நிர்பயா நிவாரண நிதியில் இருந்து நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கோவை : கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு, நிர்பயா நிவாரண நிதியில் இருந்து நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கோவை பன்னிமடை கஸ்தூரி நாய்க்கன்புதூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சம்பவம் நடைபெற்று 4 நாட்கள் ஆன நிலையில், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாததால், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர் ராதிகா பேசியதாவது :- மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியின் பேரில், குழந்தையின் சடலத்தை அன்று பெற்றுக் கொண்டோம். ஒரு சிறிய கிராமப் பகுதியில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் என்ன சிரமம் உள்ளது..?. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பதால், விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்துள்ளோம்.
மேலும், மத்திய அரசின் நிர்பயா நிதியில் இருந்து உடனடியாக பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிட வேண்டும். அரசு சார்பில் இலவச வீடு மற்றும் அரசு வேலை வழங்கிட வேண்டும் என கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். நிர்வாக ரீதியான சில காரணங்களால் உடனடியாக சில விஷயங்களை செய்ய முடியாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆனால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆட்சியர் உத்தரவாதம் அளித்தார். நடவடிக்கைகள் இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம், என்றார்.