கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயக கடமையை நேர்மையாக செயல்படுத்த வலியுறுத்தி, தங்கம் மற்றும் வெள்ளியில் கட்சி சின்னங்களையும், நடுநிலை வாக்காளனின் மனநிலை சிற்பத்தையும் கோவை தங்க நகைப் பட்டறை தொழிலாளி யு.எம்.டி.ராஜா வடிவமைத்துள்ளார்.
கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயக கடமையை நேர்மையாக செயல்படுத்த வலியுறுத்தி, தங்கம் மற்றும் வெள்ளியில் கட்சி சின்னங்களையும், நடுநிலை வாக்காளனின் மனநிலை சிற்பத்தையும் கோவை தங்க நகைப் பட்டறை தொழிலாளி யு.எம்.டி.ராஜா வடிவமைத்துள்ளார்.
குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகைப் பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா, அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பொங்கலின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார். சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர். உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார்.

இந்த நிலையில், தற்போது, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி 300 மி.கிராம் தங்கத்தைப் பயன்படுத்தி கட்சி சின்னங்களை ஒரு இன்ச் அளவில் உருவாக்கி உள்ளார். இதில், கை சின்னம், தாமரை, உதயசூரியன், சுத்தி அரிவாள், இரட்டை இலை ஆகியவற்றை செய்து உள்ளார். இதேபோல், காம்பஸில் பென்சிலை கொண்டு ஒரு வாக்காளர் வாக்களித்து விட்டு, 'நடுநிலையாக வாக்களிப்போம், உண்மையை நிலை நாட்டுவோம்,' என்பதை வெளிப்படுத்தும் வகையிலும், ஓட்டு அளித்ததற்கு அடையாளமாக விரலில் மை வைக்கப்பட்டதை உயரத்தி காட்டி, 'எனது வாக்கு எனது எதிர்காலம்' என்பதை விளக்கும் விதமாக அமைத்து இருந்தார்.

"ஒரு கிராம் வெள்ளியில் 18 சின்னங்கள் பென்சில் பாக்சில் பதிய செய்து 100% வாக்குப்பதிய செய்து, வரும் ஏப்ரல் 18-ம் தேதி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி இதனை செய்துள்ளேன். இதற்கு இரண்டு நாட்கள் ஆகியது," என்றார் தங்க நகைப் பட்டறை தொழிலாளி யு.எம்.டி.ராஜா.