கோவை : வீட்டில் இருந்து 20 அடி தூரத்தில் குழந்தைகளை விளையாட விட முடியாவிட்டால் தமிழகம் பாதுகாப்பான மாநிலம் எனக் கூறுவதில் அர்த்தம் இல்லை என மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை : வீட்டில் இருந்து 20 அடி தூரத்தில் குழந்தைகளை விளையாட விட முடியாவிட்டால் தமிழகம் பாதுகாப்பான மாநிலம் எனக் கூறுவதில் அர்த்தம் இல்லை என மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய மற்றும் வடசென்னை பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக இன்று கோவை வந்தார்.

பின்னர், பன்னிமடையில் உள்ள சிறுமியின் இல்லத்திற்கு நேரில் சென்ற அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவர்களுடன் அனுபவமிக்க வழக்கறிஞர்களும் சென்றிருந்தனர். மேலும், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில், தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து தண்டிக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தினார்.
பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- குழந்தையின் பெற்றோரை பார்த்துவிட்டு வந்துள்ளேன். அவர்களுக்கு நியாயம் கிடைத்ததாக தெரியவில்லை. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தேர்தல் வேளையில் இருப்பதால், இந்த விவகாரம் குறித்து நேரில் சந்திக்க தங்களுக்கு நேரம் அளிக்கவில்லை. வீட்டில் இருந்து 20 அடி தள்ளி குழந்தைகளை விளையாட அனுப்ப முடியாவிட்டால், அது பாதுகாப்பான தமிழகம் இல்லை. பதற்றத்தை தணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் என்பதால் தாம் ஆறுதல் கூற வரவில்லை. எப்போதும் வந்திருப்பேன். இது போன்ற சம்பவங்களைத் தடுக்க எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. மிகச்சிறிய ஊரில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சரியல்ல. தேர்தலை விட குழந்தையின் பெற்றோரின் கவலையும், குழந்தையின் மரணமும் தான் முக்கியம். குழந்தைகளின் மீதான குற்றங்கள் அதிகம் நடக்கும் இடம் தமிழகம் என ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. அப்படி இருக்கக் கூடாது என்றாலும், இந்த சம்பவங்கள் அது உண்மைதானோ என அதிர்ச்சி அளிக்கிறது.
எல்லா துறையிலும் ஊழல் என்பதை இப்போது சுட்டிக்காட்ட வேண்டாம். காவல்துறை நினைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரிசு வாங்கக் கூடாது. குற்றவாளி குறித்து தகவல் அறிந்தால், அவனை காட்டிக் கொடுக்க வேண்டும், இவ்வாறு கமல் தெரிவித்தார்.
கோவையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு சட்டரீதியான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அ.தி.மு.க.வின் கோவை மாநகர மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி .அருண்குமார் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.