கோவை : கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு பலமுறை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
கோவை : கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு பலமுறை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியிருப்பது போலீசாரின் சட்டப்பிரிவு மாற்றுதல் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் வனிதா. இவர்களின் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். திங்கட்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இவர், மாலை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர். மேலும், விடிய விடிய பல்வேறு பகுதிகளில் குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை கஸ்தூரிநாயக்கன் புதூர் பகுதியில் கத்தியால் அறுபட்ட காயங்களோடு, சிறுமி பள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, குற்றவாளிகளை பிடிக்க தாமதிப்பதைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்கக் கோரியும் கோவை அரசு மருத்துவமனை முன்பு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சிறுமியின் உடலை நேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பதால் குற்றவாளிகள் மீதான சட்டப்பிரிவை மாற்றுவது குறித்து கோவை நீதிமன்றத்தில் துடியலூர் போலீசார் அறிக்கை சமர்ப்பித்தனர். அதில், 'கொலை செய்யப்பட்ட சிறுமியை மர்ம நபர்கள் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் வாயையும், மூக்கையும் துணியால் வைத்து அழுத்தியும், ஏதோ ஒரு கயிறு போன்ற பொருளை வைத்து இறுக்கியும் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், சிறுமி உயிரிழந்துவிட்டார்.
எனவே, கடந்த 26-ம் தேதி இந்த வழக்கினை குற்ற எண் குழந்தை காணவில்லை @ 302 ஐ.பி.சி., @ 376 (ஏ) ஐ.பி.சி., 5(I), 5(எம்) ஆர்/டபுள்யூ 6 ஆப் போஸ்கோ சட்டத்தின்படி பிரிவு மாற்றம் செய்து செய்யப்பட்டது,' இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.