கோவை : மருதமலை அருகே தனியார் ரெஸ்டாரண்ட்டுக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற முதியவரும் உயிர்நீத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மருதமலை அருகே தனியார் ரெஸ்டாரண்ட்டுக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற முதியவரும் உயிர்நீத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மருதமலை சாலையில் உள்ள சட்டக்கல்லூரி அருகே பொதிகை ரெஸ்டாரண்ட் உள்ளது. இந்த ரெஸ்டாரண்டில் 7 அடி ஆழம் கொண்ட நீச்சல் குளமும் உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 பேர் சென்றுள்ளனர். இவர்கள் சுமார் 11 மணி அளவில் குளிப்பதற்கான அனுமதி பெற்று, நீச்சல் குளத்தில் குளித்து சென்றுள்ளனர்.

இதில், அன்புச்செல்வன் என்ற மாணவன் நீச்சல் குளத்தில் 7 அடி ஆழத்தில் மூழ்கி ஆபத்தான சூழலில் தத்தளித்து வந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், அன்புச்செல்வனை காப்பாற்றும்படி சத்தம் எழுப்பினர். இதைக் கண்ட காவல் பணியில் இருந்த தேவராஜ் (60), மாணவனைக் காப்பாற்ற நீச்சல் குளத்தில் குதித்து உள்ளார். ஆனால், மாணவர் குளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது, காவல் பணியாளர் தேவராஜையும் நீருக்குள் இழுத்துள்ளார். இதில், இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், தகவலறிந்து வந்த வடவள்ளி போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முறையாக நீச்சல் பயிற்சியாளர்கள் இல்லாததும், முதலுதவிக்கு எந்த உபகரணமும் இல்லாததும் இவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆகவே, நீச்சல் குளம் வைத்திருப்பவர்கள் முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டுதான், குளத்தில் இறங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.