கோவை : வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3-வது நாளாக பற்றி எரியும் தீயை, இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை கொண்டு அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை : வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3-வது நாளாக பற்றி எரியும் தீயை, இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை கொண்டு அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள வெள்ளலூர் பகுதியில் சுமார் 690 ஏக்கர் பரப்பளவில் குப்பைகிடங்கு உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் தினசரி 700 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் மாநகராட்சியால் லாரிகள் மூலம் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பதும் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதும் இந்த புகை மூட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகவே உள்ளது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 5 மணி அளவில் குப்பை கிடங்கில் தீ பிடித்துள்ளது. இந்த தீயினை அணைக்கும் பணியில் கிட்டதட்ட மாநகரில் உள்ள ஆறு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு மாநகராட்சி தண்ணி லாரி உதவியுடன் தண்ணீர்கள் நிரப்பப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் இரவு பகல் பாராமல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் தீரத்தீர வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், தீயானது தற்போது வரை அணைந்த பாடில்லை.
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இன்று 3-வது தொடர்ந்து தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்கு உதவியாக இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
“காற்று காரணமாக தீயானது மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று புகையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஹெலிகாப்டர்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்கின்றனர் கோவை மாநகராட்சி அதிகாரிகள்.