நீலகிரி : உதகையில் ஜி1 காவல்நிலையத்தை பிரச்சார மேடையாக அ.தி.மு.க.வினர் பயன்படுத்திய சம்பவம் பணியில் இருந்த காவலர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியது.
நீலகிரி : உதகையில் ஜி1 காவல்நிலையத்தை பிரச்சார மேடையாக அ.தி.மு.க.வினர் பயன்படுத்திய சம்பவம் பணியில் இருந்த காவலர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியது.

நீலகிரி மக்களவை தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தியாகராஜன் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளருடன் வேட்புமனு தாக்கலுக்கு வந்தவர்கள், வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு முன்பே நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர், வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்த அ.தி.மு.க., வேட்பாளர் தியாகராஜன், கட்சியினருடன் இணைந்து பொதுமக்களை சந்திக்க வேண்டி இருந்ததால் மேடானப் பகுதியை கட்சியினர் தேடி அலைந்தனர். அப்போது, உதகை ஜி1 காவல்நிலையம் மேடான பகுதியில் இருந்ததால், காவல்நிலைய சுவர் மீது ஏறி தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கினர்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு நூறு மீட்டருக்குள் கட்சியினரை அனுமதிக்காத காவல் துறையினரின் செயல்பாட்டிற்கு மத்தியில், காவல் நிலையத்தையே ஆளும் கட்சியினர் பிரச்சார மேடையாக்கினர். காவல்நிலையத்தின் மேடையில் மாநிலங்களவை, மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்ததால், காவல் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகினர்.