களையிழந்த கோவை தேர்தல் களம்..! : புயலுக்கு முன்னான பேரமைதியா..?

17-வது மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. நாடு முழுவதும் தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டுள்ளது. கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ப, தேர்தல் களத்திலும் அனல் பறக்கிறது.

17-வது மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. நாடு முழுவதும் தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டுள்ளது. கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ப, தேர்தல் களத்திலும் அனல் பறக்கிறது. 

வாக்கு சேகரிப்பில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் களம் பரபரத்து கொண்டிருக்க, கோவை தேர்தல் களம் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது. தெருக்கள் எல்லாம் அமைதியாக இருக்க, சமூக வலைதளங்களில் மட்டுமே சத்தங்கள் ஓங்கி ஒலிக்கின்றன. வாட்ஸ் ஆப் குழுக்களிலும், முகநூலிலும் வாக்குறுதிகளை சொல்லியும், எதிர்கட்சிகளை குற்றம்சாட்டியும் ஆதரவு திரட்டும் பணியில் அரசியல் கட்சியினர் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

தயக்கம் காட்டும் சுயேட்சைகள் :

தேர்தல் நாள் வந்தாலே புதிது, புதிதாக வேட்பாளர்கள் முளைப்பார்கள். விதவிதமான வாக்குறுதிகளை அள்ளிவிட்டும், வித்தியாசமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்வதும் வழக்கம். ஆனால், இம்முறை கோவையில் குறைவான எண்ணிக்கையிலேயே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19-ம் தேதி துவங்கியது. கடந்த 3 நாட்களில் கோவை தொகுதியில் போட்டியிட 2 சுயேட்சைகளும், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட 2 சுயேட்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 



தேர்தல் அலுவலகங்கள் இப்போது வரை வெறிச்சோடி காணப்படுகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய சுயேட்சைகள் தயக்கம் காட்டி வருவதையே, இது வெளிக்காட்டுகிறது. போட்டியிடுவதாக அறிவித்த சில சிறிய அமைப்புகளும் பின்வாங்கி உள்ளன. ஓரிரு கட்சிகளை தவிர்த்த அரசியல் கட்சிகளே டெபாசிட் தொகையை இழக்கும் நிலையில், சுயேட்சைகள் எம்மாத்திரம்..?. இதனால், இந்த தேர்தலில் குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர்களே களத்தில் நிற்க வாய்ப்புள்ளது.

நிதனம் காட்டும் முக்கிய கட்சிகள் :

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை தொகுதி அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட அன்றே, அக்கட்சி வேட்பாளரை அறிவித்தது. அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராசனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 



பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யினால் மூடப்பட்ட தொழிற்கூடங்களை திறக்கவும், சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமையை தடுப்போம் என்பதை முக்கிய வாக்குறுதியாக பி.ஆர்.நடராஜன் அளித்துள்ளார். இதையடுத்து, கூட்டணி கட்சிகளுடனான கூட்டங்கள், அமைப்பு ரீதியாக ஆதரவு திரட்டல் என ஆதரவு திரட்டி வருகிறார். அதேசமயம், சமூக வலைதளங்களின் மூலமாக தீவிரமாக சி.பி.எம். கட்சியினர் ஆதரவு திரட்டி வருகின்றனர். கோவை தொகுதிக்கு என தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடும் பணியிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும், வாக்கு கேட்டு வீதிகளுக்கு இன்னும் வரவில்லை.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.,விற்கு கோவை தொகுதி ஒதுக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் வகையில், பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. 



பா.ஜ.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்டதால், கட்சி கூட்டங்கள், கூட்டணி கட்சியுடனான கூட்டங்கள், தேர்தல் பரப்புரை திட்டங்கள் என்பதற்கு பின்னரே, வாக்கு கேட்டு வரக்கூடும். பா.ஜ.க., மார்க்சிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் மக்கள் அறிந்த முகங்கள் தான். ஏற்கனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தவர்கள். தாமரையும், சுத்தியல் அரிவாள் நட்சத்திரமும் மக்கள் அறிந்த சின்னங்கள் தான். இருவர்களின் செயல்பாடுகள் குறித்தும் மக்களுக்கு ஓரளவு தெரியும். அடுத்த வாரத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு, வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இரு கட்சிகளும் நிதானமாக அடியெடுத்து வைத்து வருகிறார்கள்.

களமிறங்கும் புதிய கட்சிகள் :

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளராக அப்பாதுரை அறிவிக்கப்பட்டார். டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள ஆதரவு மேற்கு மண்டலத்தில், அக்கட்சிக்கு இல்லை. வேட்பாளரும் மக்கள் அறிந்த முகம் அல்ல. எந்த சின்னம் கிடைக்கும் என்பதில் சிக்கல் நீடிக்கிறது. குக்கர் கிடைக்குமா..? இல்லை தொகுதிக்கு ஒரு சின்னம் என கிடைக்குமா..? என தெரியவில்லை. சின்னம் கிடைத்த பின்னர் தான், வாக்கு கேட்டு மக்களிடம் செல்வது சரியென கருதி அ.ம.மு.க.வும் அமைதி காத்து வருகிறது. 

டார்ச் லைட் சின்னத்தை பெற்ற நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கோவை தொகுதி வேட்பாளரை வருகின்ற 24-ம் தேதி அறிவிக்க உள்ளது. கரும்பு விவசாயி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர் கல்யாணசுந்தரம் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. 



இக்கட்சிகள் பரப்புரைக்கு தயாராகி விட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறது. முதல் முறையாக மக்களவை தேர்தல் களம் காணும் இந்த கட்சிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் 26-ம் தேதியோடு முடிவடைய உள்ளது. இந்த வாரத்தில் பெரிதாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை. கடைசி இரண்டு நாட்களில் தான், முக்கிய கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கு பிறகே வாக்காளர்களை தேடி வீதியில் வேட்பாளர்கள் களமிறங்கக் கூடும். சில கட்சிகளும், சுயேட்சைகளும் சின்னங்கள் கிடைத்த பின்னரே தேர்தல் களத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேரமைதிக்கு பின்...

வழக்கம் போல கோயமுத்தூர் மக்களவை தொகுதியை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி, ஒதுங்கி விட்டன. தி.மு.க., அ.தி.மு.க. நேரடி போட்டி இல்லாததாலும் அமைதியாக காட்சியளிக்கிறது, கோவை. கடந்த தேர்தல்களில் பல முனை போட்டி நிலவியது. போட்டி போட்டு அரசியல் கட்சிகள் பரப்புரை செய்தன. அனல் பறக்க பரப்புரை செய்து வாக்கு சேகரித்தனர். இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கு பின்னால் பிரதான கட்சிகள் அணி வகுத்து நிற்கின்றன. இன்னொரு பக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கிறது. இதனால், மும்முனை போட்டி என்றாலும், தி.மு.க., அ.தி.மு.க. அணிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. மக்கள் அறிந்த சின்னங்கள், மக்களுக்கு பரிச்சயமான வேட்பாளர்கள் என்பதால், தேர்தல் களத்தில் காட்டும் அமைதியும், நிதானமும் வெற்றிக்கு உதவலாம். எதிர்கட்சிகளின் வியூகங்களை அறிந்து, அதனை முறியடிக்கும் வகையில் தேர்தல் யூக்திகளை வகுத்து தேர்தல் களமிறங்க திட்டமிட்டிருக்கலாம். எது எப்படி இருப்பினும், இது புயலுக்கு முன்னான பேரமைதியாக இருக்குமென்பது, அடுத்த வாரத்தில் உறுதியாக கூடும்..!

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...