கோவை : பாப்பநாயக்கன் பாளையம் அருகே நெம்பர் ஒன் டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 150 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை : பாப்பநாயக்கன் பாளையம் அருகே நெம்பர் ஒன் டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 150 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் சோதனைகளில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்களை டன் கணக்கில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக கைப்பற்றி வருகின்றனர். அதேபோல, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர். இருப்பினும், சமூக விரோத கும்பல்கள், பல வழிகளில் குட்கா பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பான்மசாலா, குட்கா பொருட்கள் தனியார் பேருந்துகள் மூலம் கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் விஜய லலிதாம்பிகை தலைமையில் டிராவல்ஸ் பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பாப்பநாயக்கன் பாளையம் அருகே நெம்பர் ஒன் டிராவல்ஸ் என்ற பேருந்திலிருந்து 150 கிலோ எடையுள்ள 3 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தனியார் பேருந்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அதே பேருந்தில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தப்பட்டதால், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பேருந்தை பறிமுதல் செய்துள்ளனர்.